தமிழக செய்திகள்

கிராமசபை கூட்டத்திற்கு 7 நாட்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியிட வேண்டும் - முதலமைச்சர் விஜய்க்கு கமல்ஹாசன் கடிதம்!

கிராம சபையின் நம்பிக்கை என்பது கூட்டம் முடிந்த பிறகு எடுக்கப்படும் நடவடிக்கைகளில்தான் உள்ளது.

கிராம சபைக் கூட்டங்களை வலுப்படுத்துவது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது;

“தமிழ்நாடு மக்கள் உங்கள் தலைமையின் மீது நம்பிக்கை வைத்து, மாநிலத்தை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பை உங்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

உங்கள் தலைமையில், அரசை மக்களிடம் மேலும் நெருக்கமாகக் கொண்டு சேர்க்கும் மக்களாட்சி மற்றும் நிர்வாக அமைப்புகளை மேலும் வலுப்படுத்த ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது.

வருகிற அக்டோபர் 2-ம் தேதி நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டங்களில் ஊர் தொடர்பான பிரச்சனைகளை விவாதித்து, உள்ளாட்சி நிர்வாகத்தில் நேரடியாகப் பங்கேற்க முடியும்.

இது தொடர்பாக, நான் பின்வரும் கோரிக்கைகளைத் தங்களது பரிசீலனைக்கு  வழங்குகிறேன்:

பஞ்சாயத்துப் பிரதிநிதிகளின் மாதாந்திர மதிப்பூதியத்தை கணிசமாக உயர்த்துதல் வேண்டும். தற்போது அவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர மதிப்பூதியமானது மிகவும் குறைவாக உள்ளது.

உதாரணமாக, கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்களின் மாதாந்திர மதிப்பூதியமானது 2021-ல் ரூ.1,000-லிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்பட்டது.

நீங்கள் இந்தக் கோரிக்கைகளைப் பரிசீலித்து, உங்கள் தலைமையில் தமிழ்நாட்டின் கிராம சபைகளை மேலும் வலுப்படுத்தவும், அதிக மக்கள் பங்கேற்பு கொண்டதாகவும், தன்னாட்சி பெற்றதாகவும் மாற்ற நடவடிக்கை எடுப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT