இந்த ஆண்டு சூப்பர் எல் நினோ தாக்கத்தால் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து 6 சுற்றுகளாக மழை கொட்டும். வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் 2 புயல்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் அதி கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு ஏற்படும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் இந்த ஆண்டு சூப்பர் எல் நினோ பாதிப்பு காரணமாக வரலாறு காணாத அளவுக்கு மழைப்பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
இதனால் வடகிழக்கு பருவமழை எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறதோ? என்கிற அச்சம் பரவலாகவே நிலவி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை காலங்களில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றது.
அதே போன்று வட மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை வெள்ள பாதிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக சென்னையில் வெள்ள பாதிப்பு என்பது சாதாரண மழைக்கே கடும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவே இருக்கும்.
சென்னையில் பெரு வெள்ளம் ஏற்பட்டபோது அதிகபட்சமாக 40 செ.மீ. அளவுக்கு மழை பெய்தது. அந்த மழை பாதிப்பு சென்னை மக்களுக்கு பெரிய அளவில் சிரமத்தை ஏற்படுத்தியது.
இதுபோன்ற சூழலில் தான் 60 செ.மீ. மழைக்கு மேல் தமிழகம் முழுவதும் பரவலாக மழைப்பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறி இருப்பதால், தமிழக அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை வேகப்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பது பற்றி தனியார் வானிலை ஆய்வாளரான ஹேமந்த் சந்தர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
சூப்பர் எல் நினோ காரணமாக இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த மாதம் முதல் டிசம்பர் 31 -ந்தேதி வரையில் 3 மாதங்களில் 44 செ.மீ அளவுக்கு இயல்பாக மழை பதிவாக வேண்டும். ஆனால் இந்த ஆண்டு 50 முதல் 60 செ.மீ மேல் அதிக மழை பதிவாகும்.
சென்னை,திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் அதி கனமழைக்கும், குறுகிய நேரத்தில் அதிக மழைக்கும் வாய்ப்பு உள்ளது.
வடகடலோரம், காவிரி டெல்டா, தென் கடலோரம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இயல்பை விட அதிக மழை பதிவாக கூடும்.
சூப்பர் எல் நினோ தாக்கத்தால் காற்று பாதிப்பை ஏற்படுத்தும் புயல் உருவாக வாய்ப்பு இல்லை. மழை தரும் புயல்கள் உருவாகலாம்.
வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் தலா ஒரு புயல் உருவாக வாய்ப்பு உள்ளது. அக்டோபர் 20 முதல் டிசம்பர் 20 வரை 2 மாதங்கள் வடகிழக்கு பருவமழை 6 சுற்றுகளாக மழைப் பொழிவை கொடுக்கும். அடுத்த மாதம் பிரதான மழை மாதமாக அமையும். அப்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்.
சூப்பர் எல் நினோ 2-ம் கட்ட தாக்கம் வடகிழக்கு பருவமழை காலக்கட்டத்தில் அமைந்து குறுகிய நேரத்தில் அதீத கனமழை, பெருமழை நிகழ்வுகளை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் அதையொட்டிய அந்தமான் கடலில் அடுத்த வாரம் மேலடுக்கு காற்று சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தையொட்டிய தென்கிழக்கு வங்க கடலில் காற்று அழுத்த தாழ்வு பகுதி உருவாகும். அதே கால கட்டத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய லட்சத்தீவு பகுதிகளில் மேலடுக்கு காற்று சுழற்சியும் உருவாக இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் சின்னங்களும் தமிழகத்தில் பெரிய அளவில் மழைப்பொழிவை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.