தமிழக செய்திகள்

சென்னையில் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வராது

பூண்டி ஏரியில் மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் 2038 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி மற்றும் கட லூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரிகள் உள்ளன.

இந்த ஏரிகளில் மொத்தம் 13 ஆயிரத்து 222 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது குடிநீர் ஏரிகளில் சுமார் 9 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. வழக்கமாக சென்னை நகரில் ஒரு மாதத்திற்கு ஒரு டி.எம்.சி தண்ணீர் தேவைப்படும்.

எனவே தற்போது ஏரிகளில் உள்ள தண்ணீரை வைத்து இந்த கோடை காலம் முழுவதும் தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் செம்பரம்பாக்கம் ஏரியிலும் 80 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கனஅடி ஆகும். இதில் தற்போது 2952 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 210 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. குடிநீர் தேவைக்காக 165 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

இதேபோல் பூண்டி ஏரியில் மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் 2038 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. சென்னை குடிநீருக்காக செம்பரம்பாக்கம் ஏரிக்கு இணைப்பு கால்வாய் வழியாக 250 கனஅடியும், பேபி கால்வாய் வழியாக 17 கனஅடியும் தண்ணீர் அனுப்பப்படுகிறது.

புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மி.கன அடியில் 2030 கன அடி தண்ணீர் உள்ளது. குடிநீர் தேவைக்காக 182 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது.

சோழவரம் ஏரியில் 1081 மி.கனஅடியில் 491 மி.கன அடியும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 500 மி.கனஅடியில் 408 மி.கனஅடியும், வீராணம் ஏரியில் 1465 மி.கன அடி யில் 1017 மி.கனஅடியும் தண்ணீர் உள்ளது.