அரசு நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது தொடர்பாக தமிழ்நாட்டிற்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அதாவது அரசு நிகழ்ச்சிகளில் மாநிலப்பாடல் எப்போது பாடப்பட வேண்டும் என எந்த உத்தரவும் மாநில அரசுகளுக்கு பிறப்பிக்கப்படவில்லை எனவும், தேசியப் பாடலும் தேசிய கீதமும் பாடப்படும் பட்சத்தில், முதலில் தேசியப் பாடலையும், அதைத் தொடர்ந்து தேசிய கீதத்தையும் பாட வேண்டும் என்பதே வழிகாட்டுதல் என மத்திய அரசு தெளிவுப்படுத்தியுள்ளது.
மாநிலத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடக்கோரி, சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த அனன்யா ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநலமனு இன்று தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, “தேசியப் பாடலும், தேசிய கீதமும் பாடப்படும் பட்சத்தில், முதலில் தேசியப் பாடலையும், அதைத் தொடர்ந்து தேசிய கீதத்தையும் பாட வேண்டும் என்பதே வழிகாட்டுதல் என, 2026 ஆகஸ்ட் 9 அன்று மத்திய அரசு ஒரு விளக்கத்தை வெளியிட்டது," என மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர். எல். சுந்தரேசன் தெரிவித்தார்.
இதன்மூலம் நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதால் எந்தப் பிரச்னையும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
முதலமைச்சர் விஜய் பதவி ஏற்பு விழாவிலேயே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் சர்ச்சை தொடங்கியது. ஆனால் அது ஆளுநர் நிகழ்ச்சி என்பதால் வந்தே மாதரம் முதலில் பாடப்பட்டதாக தவெக அமைச்சர்கள், கூட்டணி தலைவர்கள் விளக்கம் அளித்தனர்.
இச்சூழலில் கடந்த 2026 ஜூலை 28 அன்று திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் முதலில் வந்தே மாதரமும், இரண்டாவது தேசிய கீதமும், மூன்றாவது தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. தமிழ்நாட்டின் மாநிலப்பாடலும், அப்பாடலை எழுதியவருமான மனோன்மணியம் பெயரைக் கொண்ட பல்கலைக்கழகத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது பலதரப்பிலிருந்தும் கண்டனங்களை பெற்றது.
இதனிடையே விழாவிற்கு முன்னரே பல்கலைக்கழக வேந்தர் இதுதொடர்பாக பேசியிருந்தார். இதனால் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதனும் இந்த பட்டமளிப்பு விழாவை புறக்கணித்திருந்தார்.
இவ்வாறு இவ்விவகாரம் பெரும் பேசுபொருளாக தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். அதன்படி இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படும் என்று தவெக தலைமையிலான அரசு தீர்மானமும் நிறைவேற்றியுள்ளது.
ஆனால் இதற்கு முன்னரே, 2021-ம் ஆண்டே திமுக அரசு மாநில நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி அரசாணை வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.