தமிழக செய்திகள்

விஜய் சேதுபதியை தனிப்பட்ட முறையில் யாரும் தாக்க வேண்டாம் - இயக்குநர் சீனு ராமசாமி!

பெரிய நடிகர்களின் படங்களிலேயே இமேஜ் பார்க்காமல் வில்லனாகவும் நடித்தவர். மறைந்திருந்து தாக்கும் குணம் கொண்ட மனிதன் அல்ல.

தலைமைத்துவம் குறித்த நடிகர் விஜய் சேதுபதியின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், அவசரப்பட்டு அவர்மீது தனிநபர் தாக்குதலை தொடுக்கவேண்டாம் என மக்களிடம் இயக்குநர் சீனு ராமசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,

“அனைவருக்கும் அன்பான வணக்கம். விஜய் சேதுபதியை உள்ளும், புறமும் நன்கறிவேன். எதையும் நேர்பட கண்கள் பார்த்து சொல்லக் கூடிய மனிதன்; மறைந்திருந்து தாக்கும் குணம் கொண்ட மனிதன் அல்ல. உண்மையில் தமிழ்நாடு சட்டசபை நிகழ்ச்சிகளை மக்கள் அதிகமாக பார்க்கிறார்கள்.

அரசியல் சாயம்

மற்ற ஓடிடி, சினிமா, இணையதள செயல்பாடுகள் எல்லாம் சட்டசபை காலங்களிலேயே மந்தமாகிவிட்டது, இதுதான் உண்மை. பிக்பாஸ் நிகழ்ச்சியை கொஞ்சம் அரசியல் சாயம் பூசி விட்டால் மக்களின் கவனத்தை பெற விடலாம் என்று அதை நடத்துபவர்கள் நினைத்திருக்கலாம்.

ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் சொல்லப்படும் ஒரு வசனத்தை எடுத்துக்கொண்டு இவ்வளவு சீரியஸாக ரியாக்ட் பண்ண வேண்டிய அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன்.

அதை வைத்து அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்குவது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இன்று இந்தியா முழுக்க நன்கறிந்த பெருமைக்குரிய கலைஞன் சேது.

வில்லன் கதாபாத்திரங்களிலும்...

ஊக்கப்படுத்தப்பட்ட பல படங்களில் கெஸ்ட் ரோல் நடித்தவர், தனக்குப் பிடித்த பெரிய நடிகர்களின் படங்களிலேயே இமேஜ் பார்க்காமல் வில்லனாகவும் நடித்தவர், நிறைய புதிய இயக்குநர்களோடு பயணித்தவர், 100 மூத்த திரைத் தொழிலாளர்களுக்கு 100 சவரன் தங்கம் தந்தவர், பல படங்கள் சிக்கலில் சிக்கியபோது தன் சம்பளத்தை விட்டுக்கொடுத்து உதவியவர்.

முன்பின் தெரியாத பலருக்கும் நன்மைகள் செய்த மனிதன் விஜய் சேதுபதி. ஆகவே அவசரப்பட்டு தனிப்பட்ட முறையில் அவரை யாரும் தாக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT