தமிழகத்தில் பொதுமக்கள் இனி போலீஸ் நிலையம் செல்லாமல், www.police.tn.gov.in இணையதளம் மூலம் புகார்களை பதிவு செய்து, சி.எஸ்.ஆர். ரசீதை பெறலாம். இந்த புதிய சேவையை டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் தொடங்கி வைத்தார்.
தமிழக முழுவதும் போலீஸ் நிலையங்களில் பொதுமக்கள் புகார் அளிக்க செல்லும் போது பல்வேறு இடர்பாடுகளை சந்திக்க நேரிடுகிறது.
குறிப்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வெளியில் சென்றிருக்கும் நேரங்களில் பொதுமக்கள் போலீஸ் நிலையங்களுக்கு நேரில் சென்றால் அங்கிருக்கும் காவலர்கள் இன்ஸ்பெக்டர் வெளியே சென்று உள்ளார். அவர் வந்த பிறகு வாருங்கள் என்று கூறி அனுப்பிவிடுவார்கள்.
இதன் காரணமாக போலீஸ் நிலையங்களுக்கு சென்று புகார் கொடுப்பதற்குள் பொதுமக்கள் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வந்தனர். இதனை தவிர்க்கும் வகையில் போலீஸ் நிலையங்களுக்கு செல்லாமலேயே புகார் மனுக்களை ஆன்லைன் மூலமாக அளித்து சி.எஸ்.ஆர். பெற்றுக்கொள்ளும் நடைமுறை தமிழக காவல்துறையில் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இணையதளம் வாயிலாகப் புகார்களைப் பதிவு செய்து, அதற்கான ‘மின்னணு சமூக சேவைப் பதிவேடு’ (சி.எஸ்.ஆர். ) ரசீதைப் பெறும் வகையில் புதிய இணையவழிச் சேவையை போலீஸ் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் இன்று தொடங்கி வைத்தார்.
www.police.tn.gov.in என்ற இணையதளம் மூலம் இந்த சேவையை பொதுமக்கள் பெற முடியும் என்று போலீஸ் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் டிஜிபி அலுவலகத்தில் இன்று அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.