தமிழக செய்திகள்

இனி புகார் அளிக்க நேரில் வர வேண்டாம்- பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் அறிமுகப்படுத்திய திட்டம்

பொழிச்சலூர் பகுதியில் ஏரிகள் ஓரம் குப்பைகள் கொட்டுப்படுவதாக நேற்று புகார் வந்தது. தற்போது அங்கு குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது.

பல்லாவரம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழகம் கட்சி சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி, பல்லாவரம் பகுதியில் வேலைக்கு செல்பவர்கள், கல்லூரி படிக்கும் இளைஞர்கள் நேரடியாக புகார் அளிக்க முடியாதவர்கள் வசதிக்காக க்யூ ஆர் கோடு ஒன்றை பொதுமக்கள் புகார் அளிக்கும் ஏதுவாக அறிமுகப்படுத்தினார்.

இந்த கியூ ஆர் கோர்டு ஸ்கேன் செய்தால் அதில் வரும் புகார் மனுவில் மக்கள் தங்கள் குறைகளை புகாராக தெரிவிக்கலாம். அதில் வரும் புகார்களை ஒவ்வொன்றாக ஆய்வு செய்து அனைத்திற்கும் தீர்வு காணப்படும் என பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய காமாட்சி கூறுகையில்,

பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் வளர்ச்சிக்காகவும் மக்கள் குறை தீர்ப்பதற்காகவும் க்யூ ஆர் கோடு ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளோம். நேரில் வந்து புகார் அளிக்க முடியாத பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் இந்த க்யூ ஆர் கோடு மூலம் புகார் அளித்தால் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தக் கியூ ஆர் கோடை தொடங்கிய இரண்டு நாட்களில் சுமார் 200 புகார்கள் வந்துள்ளது. இதில் வரும் சிறிய புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும். பெரிய குறைகளுக்கு 10 முதல் 15 நாட்களில் தீர்வு காணப்படும்.

சாலை வசதிகள், மழை நீர் கால்வாய், கழிவு நீர் கால்வாய் குறித்து அதிகப்படியான புகார்கள் வந்துள்ளது. இந்த புகார்கள் அனைத்தையும் ஆய்வு செய்து பிரச்சனைகளை தீர்க்க சிறிது காலம் தேவைப்படும்.

பொழிச்சலூர் பகுதியில் ஏரிகள் ஓரம் குப்பைகள் கொட்டுப்படுவதாக நேற்று புகார் வந்தது. தற்போது அங்கு குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. மேலும் குப்பை தொட்டிகள் இல்லாத பகுதிகளில் குப்பை தொட்டிகளை அமைக்க உத்தரவிட்டு உள்ளோம்.

பல்லாவரம் தொகுதியில் குண்டும் குழியுமான மோசமான சாலைகளை கணக்கெடுத்து அது குறித்த அறிக்கையை அந்தந்த துறை அமைச்சர் இடம் கொண்டு சேர்த்து அதற்கான தீர்வுகளை காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மழைக்காலம் வருவதற்கு முன்பு குப்பைகளை முழுவதும் அகற்ற வேண்டும். தொகுதி முழுவதும் மழை நீர் வடிகால் பணிகளை முழுவதும் சீரமைக்க வேண்டும். மழைக்காலத்தில் மழை நீர் தேக்கம் என்ற ஒரு பிரச்சனையை இருக்கக்கூடாது என்ற நோக்கில் நாங்கள் இந்த பணிகளை கணக்கிட்டு செய்து வருகிறோம்.

தொகுதியில் உள்ள பாதாள சாக்கடை மூடிகள் அனைத்தும் புதிதாக போடப்பட்டு மூடப்படும். தொகுதியில் சுகாதார சீர்கேடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளும் ஆய்வு செய்து அகற்றப்படும். திருநீர்மலை ஏரியை முழுவதும் ஆய்வு செய்து அங்கு எவ்வளவு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பார்த்துவிட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

நாங்கள் தற்போது தான் புதிய ஆட்சி அமைத்துள்ளோம். தொகுதி மக்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது என்பதை முதலில் ஆராய்ந்து அதற்கான தீர்வை காண உள்ளோம். மேலும் தொகுதியில் எந்தெந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்து அதற்கான பணியை செய்ய உத்திரவிட உள்ளேன்.

தாம்பரம் மாநகராட்சி மேயர், மண்டல அதிகாரிகள் திமுகவைச் சார்ந்தவராக இருந்தாலும் இதுவரை எங்களுக்கு எந்த ஒரு இடையூறும் தரவில்லை, தொகுதி முழுவதும் குடிநீர் பிரச்சனைகள் தேவை குறித்து கேட்டு உள்ளேன்.

மேலும் தொகுதி பிரச்சனைகளை புகாராக அளிக்க அறிமுகப்படுத்தப்பட்டுள்ள க்யூ ஆர் கோடு துண்டு பிரசுரங்களாகவும் அனைவருக்கும் வழங்கப்படும். அதே போல் அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிரப்பட உள்ளது. மேலும் பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய பொது இடங்களில் இந்த கீயூ ஆர் கோர்டு ஒட்டப்படும்.

மேலும் பொதுமக்களும் என்னை நேரில் வந்து எளிதில் அணுகி தங்களது குறைகளையும் புகார்களையும் தெரிவிக்கலாம் என்றார்.