தமிழக செய்திகள்

சொந்த மாவட்டத்திலேயே எடப்பாடி பழனிசாமிக்கு செல்வாக்கு இல்லை..!- சி.வி.சண்முகம் விளாசல்

சென்னையில் அ.தி.மு.க. துடைத்து எறியப்பட்டுவிட்டது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்விக்கு பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சில அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் இசக்கி சுப்பையா உள்ளிட்ட 6 பேர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்த நிலையில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் சிலர் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.

சி.வி.சண்முகம்

இந்தநிலையில் நேற்று எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டி எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் அறிக்கை வெளியிட்டிருந்தனர். எடப்பாடி பழனிசாமியின் தன்னிச்சையான முடிவுகளே அ.தி.மு.க. தோல்விக்கு காரனம் என்று அவர்கள் கூறியிருந்தனர்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக அ.தி.மு.க. சார்பில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட அறிக்கையில்,"சில மாவட்ட செயலாளர்களே அ.தி.மு.க. தோல்விக்கு காரனம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சி.வி.சண்முகம் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தொடர் தோல்வி

எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடர் தோல்விகளையே அ.தி.மு.க. சந்தித்துள்ளது. சென்னையில் அ.தி.மு.க. துடைத்து எறியப்பட்டுவிட்டது.

வலுவான தலைமை வேண்டும் என்பதால் எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தோம். அவரது தலைமையில் அ.தி.மு.க.வால் வெற்றிபெற முடியவில்லை. சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தலில் எதிலும் வெற்றிபெற முடியவில்லை.

பழனிசாமியின் சொந்த செல்வாக்கில்தான் 47 தொகுதிகளில் வென்றதாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார். 47 தொகுதிகள் வெற்றிக்கு எடப்பாடி பழனிசாமி காரணம் என்றால் 187 தொகுதிகளில் அவர் செல்லாக்காசாகி விட்டாரா?.

வெற்றிபெற்றால் அவர் செல்வாக்கு, தோல்வி அடைந்தால் மாவட்ட செயலாளர்கள் பொறுப்பா? விழுப்புரத்தில் எனக்கு 6 தொகுதிகள் உள்ளன. அதில் 3 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றிபெற்றது.

சொந்த மாவட்டத்தில்

சொந்த மாவட்டமான சேலத்தில் 7 தொகுதியில் ஏன் அவருக்கு செல்வாக்கு இல்லை? சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் 3 தொகுதிகளில் மட்டும் அ.தி.மு.க. வென்றுள்ளது. கூட்டணியில் பா.ம.க. இருந்ததால் வட மாவட்டங்களில் 34 தொகுதிகளில் அ.தி.மு.க. வென்றது. தேர்தல் தோல்விக்கான காரணத்தை என்னால் சொல்ல முடியும்.

தேர்தல் தோல்விக்காக எடப்பாடி பழனிசாமியை ராஜினாமா செய்யுமாறு நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை. தோல்விக்கு பொறுப்பேற்று பல தலைவர்கள் தங்களது பொறுப்புகளை ராஜினாமா செய்துள்ளார்கள். காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல்காந்தி ராஜினாமா செய்தார்.

திருமாவளவனை முதலமைச்சராக்க வேண்டும் என்று மாற்று திட்டத்தை நான் கூறினேன். தி.மு.க.வை எதிர்த்து அரசியல் செய்யும் த.வெ.க.வை ஏன் நாம் ஆதரிக்கக் கூடாது என்று பழனிசாமியிடம் கேட்டேன்.

த.வெ.க.வை ஆதரிப்பதில் தவறு இல்லை

தி.மு.க. ஆதரவில் பழனிசாமி முதலமைச்சராக முயன்றபோது, தி.மு.க.வை எதிர்க்கும் த.வெ.க.வை ஆதரிப்பதில் தவறு இல்லை.

தே.மு.தி.க.வை திட்டமிட்டு வெளியேற்றினார். தி.மு.க. வுடன் கூட்டணி பேசவில்லை என்று அவர் சத்தியம் செய்ய முடியுமா?

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக அவரே இருக்கட்டும். தோல்விக்கான காரணத்தை ஆராய வேண்டும் என்று கோருகிறோம். தோல்விக்கான காரணங்களை உண்மையாக ஆராயாமல் எங்கள் மீது பழிபோடுவதை நிறுத்துங்கள். தைரியம் இருந்தால் எங்களை அழைத்து பேசுங்கள்.

ஜெயலலிதா அமைச்சரவையில் விவசாயத்துறை அமைச்சராக இருந்தவர் அக்ரிகிருஷ்ணமூர்த்தி. அதிகாரி தற்கொலை செய்த விவகாரத்தில் அவர் மீது வழக்கு பதிந்து அவரை சிறையில் அடைத்தவர் ஜெயலலிதா.

இவ்வாறு அவர் கூறினார்.