தமிழக செய்திகள்

மனநிலை சரியில்லாமல் இருக்கும் நிர்மல்குமாரை மருத்துவரிடம் காட்டவேண்டும் - ஆளுநருக்கு எம்.பி. இன்பதுரை கோரிக்கை!

அதிமுக கொண்டு வந்த திட்டத்தை செயல்படுத்தாமல் யாரும் ஆட்சி நடத்த முடியாது .

சென்னை விமான நிலையத்தில் அ.தி.மு.க. எம்.பி., இன்பதுரை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்.,

கடுமையான மழையை சரியாக, திறமையாக கையாண்டது அண்ணா திமுக ஆட்சிதான். தற்போது மழையே பெய்யவில்லை. பெய்யாத மழைக்கு சரியாக கையாளுகிறோம் என்று சொல்வது கேலிக்கூத்தாக உள்ளது.

ஆட்சி மாற்றம்

கடந்த திமுக ஆட்சியில் சென்னையில் மட்டும் 4,000 கோடி ரூபாய்க்கு மழைநீர் வடிகால் பணி நடைபெற்றது. அதை சரியாக, முறையாக செய்யவில்லை என்று நாங்கள்தான் எதிர்ப்பு தெரிவித்தோம். தற்போது அதை தவெக சொல்கிறது.

சென்னையில் திமுகவுக்கு தேர்தலில் பலத்த அடி விழுந்ததற்கு காரணம் மழைக்காலத்தில் மழை நீர் வடிகால் பணியை சரியாக செய்யாது தான். அதனால தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

அமைச்சர்கள் ஆனந்த் குழி தோண்டினார். இவர் மரம் வெட்டினார் என்று ஜரிகை, ஜிமிக்கி வேலைகளை செய்யாமல், தற்போது கடுமையான மழை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மழையை சரியாக கையாள வேண்டும் என்றால் அமைச்சர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தற்பொழுது த.வெ.க கொண்டு வந்துள்ள மழை நீர் சேகரிப்பு திட்டம் என்பது ஜெயலலிதா கொண்டு வந்த திட்டம். அது உலக புகழ் பெற்ற திட்டம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எம்ஜிஆர் பெயரைச் சொல்லாமல், ஜெயலலிதாவின் திட்டங்களை செயல்படுத்தாமல் யாரும் ஆட்சி நடத்த முடியாது. அந்த அளவுக்கு மிகச் சிறப்பாக செயல்பட்டது அதிமுக அரசு.

அதிமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர்

கடந்த திமுக ஆட்சியில் அதிமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி செயல்படுத்தியது. தற்பொழுது உள்ள தவக அரசு எல்லா திட்டத்தையும் பயிரிடேட் செய்து செயல்படுத்துகிறது.

அதிமுகவும். தவெகவும் ஒன்றுதான் என்று சொல்லும் இந்த அரசு உலக அளவில் பாராட்டு பெற்ற சிறந்த திட்டமான மழை நீர் சேகரிப்பு திட்டத்தில் ஏன் ஜெயலலிதா பெயரை பயன்படுத்தவில்லை என்று நான் முதலமைச்சர் விஜய்யை கேட்கிறேன்.

தமிழ்நாட்டு அமைச்சர்களுக்கு காலையில் விடிந்தால் முதல் பணி அண்ணா திமுகவின் மீது அவதூறு பேசுவது, ஏதோ ஒரு வழியில் பேட்டி கொடுத்தோ, பொது மேடையில் பேசியோ, அறிக்கை வெளியிட்டோ அண்ணா திமுக மீது அவர்களின் வன்மத்தை கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இதை இப்படியே விட்டு விட முடியாது அதனால் சட்டத்தின் படி சந்திக்க வேண்டும் என்று எம்ஜிஆர், ஜெயலலிதா எங்களுக்கு கற்றுத் தந்த பாடம், காட்டிய வழி.

குறிப்பாக இரண்டு அமைச்சர்கள் எடப்பாடியார் மீதும், அதிமுக மீதும் அவதூறு பேசி வருகின்றனர். அமைச்சர் நிர்மல் குமாருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். அதேபோல் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.

அமைச்சர் மீது கிரிமினல் வழக்கு தொடரும்பொழுது ஆளுநரிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். அதன்படி ஆளுநருக்கும் நாங்கள் கடிதம் அனுப்பி உள்ளோம்.

நிர்மல்குமார் மருத்துவரிடம் செல்ல வேண்டும்

மாநில அமைச்சர்களை நியமிப்பது ஆளுநர்தான். அவர் அமைச்சருடைய நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும். அமைச்சர் நிர்மல் குமாருக்கு நாங்கள் நோட்டீஸ் வழங்கியும், அவர் அதற்கு பதில் பேசுகிறார்.

அவர் நல்ல மனநிலையில் இருக்கிறாரா என்பது தெரியவில்லை. இதை நான் கடும் விமர்சனம் செய்கிறேன் என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். ஆளுநர் நிர்மல் குமாரை உரிய மருத்துவர் கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.

இதேபோல்தான் செந்தில் பாலாஜி தன்னை அவதூறாக பேசினார் என்று நிர்மல் குமார் மீது வழக்கு தொடர்ந்தார். அப்பொழுது நிர்மல் குமார் அண்ணா திமுகவில் இருந்தார். அந்த வழக்கில் அவர் மன்னிப்பு கேட்டார்.

ஏனென்றால் அன்று அவருக்கு வழக்கறிஞராக இருந்து அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தவனே நான் தான். ஒன்று பேசினால் அதில் நிற்க வேண்டும். ஆனால் நிர்மல் குமார் அப்படி அல்ல. அதனாலதான் அவர் நல்ல மன நிலைமையில் இருக்கிறாரா என்று கேட்கிறேன்.

கட்சிக்கு என்று சொந்த பலம் இருந்தால் ஆட்கள் இருந்தால் ஏன் அண்ணா திமுக நிர்வாகிகளை சேர்க்கணும். முகமது பின் துக்ளக் என்று நீங்கள் ஒரு படம் பார்த்திருப்பீர்கள். அந்த படத்தில் போதிய எம்பிகள் இல்லாததால் அனைவரையும் துணை பிரதமர் ஆக்குவேன் என்று துக்ளக் சொல்லி இருப்பார்.

அதே போல தான் தாராபுரம் இடைத்தேர்தலில் அண்ணா திமுகவிலிருந்து த.வெ.கவிற்கு சென்றவர்கள் உட்பட ஏறக்குறைய 20 பேருக்கு துணை பொதுச் செயலாளர் தந்த கூத்தெல்லாம் நடந்தது.” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT