நீலகிரி மாவட்டத்தில் ஏ.வி.டி. குழுமத்தின் நீலமலை அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு உட்பட்ட சட்டன், லூசியானா, பவானி, காட்டேரி, வாட்டர்பால் உள்ளிட்ட எஸ்டேட்டுகள் மற்றும் கோத்தாரி நிறுவனத்திற்குட்பட்ட கிரேக்மோர், வுட்லேண்ட்ஸ், மானார், பழனியப்பா, தைமலை, சாம்ராஜ், கோரக்குந்தா, சன்னிசைடு, ஆலாடா வேலி, குன்னக்கொம்பை, பில்லி மலை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட எஸ்டேட்டுகளில் தொடாந்து 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
போதிய மழையின்மை காரணமாக தேயிலைத் தோட்டங்களில் மண்ணின் ஈரப்பதம் குறைந்து, பச்சைத்தேயிலை கொழுந்துகளின் வரத்து கடுமையாக சரிந்துள்ளதாக விவசாயிகள் மற்றும் தேயிலைத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
வழக்கமாக ஒரு ஏக்கரில் மாதந்தோறும் சுமார் 500 கிலோ பச்சைத் தேயிலை கிடைக்கும் இடங்களில் தற்போது சுமார் 200 கிலோ அளவுக்கே கிடைப்பதாகவும், இதனால் எஸ்டேட்டுகளின் உற்பத்தி மற்றும் தொழிலாளர்களுக்கான வேலை நாட்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நீலகிரியில் கடந்த சில ஆண்டுகளாக மழைப்பொழிவின் தன்மையில் ஏற்பட்டுள்ள மாற்றமும் தேயிலை சாகுபடிக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
குறுகிய காலத்தில் அதிக மழை பெய்துவிட்டு, அதன்பின் நீண்ட நாட்களுக்கு வறண்ட வானிலை நீடிப்பது தேயிலை செடிகளின் இளம் தளிர்களின் வளர்ச்சியை பாதிப்பதாக தேயிலைத் துறையினர் கூறுகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரத்தில் தேயிலைத் தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. தேயிலைத் தோட்டங்கள் மற்றும் தொழிற்சாலைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
இந்தநிலையில், தொடர்ச்சியாக 5 நாட்கள் எஸ்டேட்டுகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது தொழிலாளர்களின் வருமானத்தை நேரடியாக பாதிக்கும் என தொழிற்சங்கத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.
தேயிலை உற்பத்தி தொடர்ந்து குறைந்தால் தொழிலாளர்களுக்கான வேலை நாட்கள் மேலும் குறைவதுடன், சிறு தேயிலை விவசாயிகள், தேயிலைத் தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த வர்த்தகமும் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.
“நீலகிரி தேயிலைத் துறைக்கு ஏற்பட்டுள்ள தற்போதைய நிலையை அரசு ஆய்வு செய்து, பாதிக்கப்படும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
தேயிலை விவசாயிகளையும் பாதுகாக்க நீண்டகால திட்டங்களை செயல்படுத்த வேண்டும்” என தொழிற்சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.