ஊட்டி பர்லியார் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நடந்த மண் சரிவில் கல், மண் சகதியில் சிக்கி அரசு பஸ் மூழ்கியது. இதில் அரசு பஸ் டிரைவர் ஜனகராஜ் பஸ்சிற்கு உள்ளேயே மண்ணிற்குள் புதைந்து பலியானார்.
இந்த சம்பவம் நடைபெற்றது யாருக்கும் தெரியாமல் இருந்த நிலையில் அந்த வழியாக சுற்றுலா முடிந்து கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஊருக்கு 4 பஸ்களில் திரும்பி உள்ளனர்.
இரவில் 11 மணிக்கு கல்லாறு பகுதியில் உள்ள சோதனை சாவடி அருகே வந்தபோது மரங்கள் ரோட்டில் விழுந்து கிடந்ததால் வாகனம் செல்ல முடியவில்லை. இருட்டில் தவித்த அந்த 8 ஆசிரியைகள் மற்றும் 78 மாணவிகள் பஸ் டிரைவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துள்ளனர்.
இதுகுறித்த தகவல்களை வாட்ஸ் அப் மூலம் நண்பர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்களுக்கு அனுப்பி உள்ளனர். நீண்ட நேரமாக போராடியும் உதவிகள் கிடைக்கவில்லை. அவர்கள் தாங்கள் இருக்கும் பகுதிகளை கூகுள் மேப் மூலமும் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்து ள்ளனர்.
அதன் பிறகு கல்லாறு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு இருப்பதை அவசர போலீஸ் 100-க்கு போன் செய்து தெரிவித்துள்ளனர்.
இந்த தகவல் சென்னையில் இருந்து கோவை மாவட்ட கலெக்டர் மற்றும் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு தான் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார், போலீஸ் ஐ.ஜி.ரம்யா பாரதி, கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர்.
உடனே தீயணைப்புத்துறை வீரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கோவை மாவட்ட தீயணைப்பு வீரர்கள் நாமக்கல், பல்வேறு ஊர்களில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் வாகனங்கள் மூலம் வந்து சேர்ந்தனர்.
4 பஸ்களில் சிக்கி தவித்த மாணவிகளை மீட்பதற்காக அதிகாரிகள் சென்றபோது தான் வழியில் பர்லியார் பகுதியில் பஸ் ஒன்று சகதிக்குள் மூழ்கிக் கிடப்பதை பார்த்து திகைத்து உள்ளனர். அப்போது பஸ்சிற்குள் இருந்து கண்டக்டரின் சத்தம் கேட்டுள்ளது.
அதன் பிறகு நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அதிகாரிகள் பஸ்ஸை உடனடியாக சகதியை அகற்றி மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். சம்பவம் நடைபெற்ற இடம் மேட்டுப்பாளையத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தூரம் உள்ள பகுதியாகும்.
அதை கடந்து சென்று மேற்பகுதியில் இரவு முழுவதும் குளிரில் தவித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியைகளை அதிகாரிகள் மீட்டு கயிறு மூலம் பாதுகாப்பாக கீழ்ப்பகுதிக்கு அழைத்து வந்துள்ளனர்.
இதற்கிடையே சகதிக்குள் மூழ்கி கிடந்த பஸ்ஸை மீட்டு உள்ளே இறந்த நிலையில் கிடந்த பஸ் டிரைவர் ஜனகராஜ் உடல் மீட்கப்பட்டுள்ளது.
பஸ் இரவு 11 மணிக்கு மண் சரிவால் பஸ் மூழ்கிய நிலையில் அதிகாலையில் தான் அந்த சம்பவம் மாணவிகளை மீட்க செல்லும்போது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.
அதேபோன்று குன்னுரை சேர்ந்த சரக்கு லாரி டிரைவர் மோசின் என்பவரும் கோழி இறைச்சி ஏற்றுவதற்காக அங்கு சென்றபோது 100 அடி பள்ளத்திற்குள் வாகனத்துடன் விழுந்தார். அவரும் மீட்கப்பட்டு மேட்டுப்பாளையம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.
ஊட்டி பகுதிக்கு சுற்றுலா சென்றுவிட்டு ஊருக்கு திரும்பும்போது இரவில் மரங்கள் முறிந்து விழுந்ததால் செல்ல முடியாமல் தவித்த பள்ளி மாணவிகள் அவசர போலீஸ் 100-க்கு போன் செய்து உதவி கேட்ட பிறகு தான் அரசு பஸ் சகதிக்குள் மூழ்கி கிடந்த சம்பவமும் வெளியே வந்துள்ளது.
இதனால்தான் டிரைவர் ஜனகராஜ் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டபோது கண்டக்டர் கேசவனை உயிருடன் மீட்க முடிந்துள்ளது.
இப்போது நடந்த பெரிய மண் சரிவில் சகதியில் பஸ் சிக்கியதில் டிரைவர் ஜனகராஜ் இறந்த சம்பவ இடத்தின் அருகில் தான் கடந்த 7-ந்தேதி காரில் குன்னூரில் இருந்து அந்த வழியாக வந்த முன்னாள் விமானப்படை அதிகாரி கிருஷ்ணமூர்த்தி என்பவரது குடும்பம் சென்ற கார் மீது மலையில் இருந்து உருண்டு விழுந்த பாறை நசுக்கியது.
இதில் சம்பவ இடத்திலேயே அதிகாரி கிருஷ்ண மூர்த்தி பலியானார். காரை ஓட்டிச்சென்ற அவரது மகன் கார்த்திக், கிருஷ்ண மூர்த்தியின் மனைவி தேவகி, உறவினர் சிந்தாமணி ஆகியோர் காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்த சம்பவம் நடந்த 14 நாட்களில் மீண்டும் அதே பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு அரசு பஸ் டிரைவர் ஜனகராஜ் பரிதாபமாக பலியாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இந்த பகுதியில் மண் சரிவு குறித்து ஆய்வு செய்து பாதுகாப்பு மற்றும் சீரமைப்பு பணிகளை செய்ய வேண்டும். வரும் காலங்களில் விபத்து ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.