சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைமேடை 10 மற்றும் 11 ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகள் கடந்த 2-ந்தேதி முடிவடைந்தன. இதனைதொடர்ந்து, கடந்த 3-ந்தேதி முதல் வழக்கமான ரெயில் சேவைகள் தொடங்கப்பட்டன. இதற்கிடையே, அன்றைய தினமே இரவு நேர மின்சார ரெயில்கள் சில ரத்து செய்யப்பட்டது.
அதாவது, இரவு 11 மணிக்கு மேல் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் 7-ந்தேதி வரையில் ரத்து மற்றும் பகுதி நேர ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நேரத்தில் மின்சார ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் மிகவும் அவதி அடைந்து தங்கள் பயணங்களை மேற்கொண்டு வந்தனர். எப்போது 7-ந்தேதி முடிவடையும் மீண்டும் மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என ஆவலுடன் காத்திருந்தனர்.
இதற்கிடையே, இந்த ரத்து 15-ந்தேதி வரையில் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. என்ன செய்வது என தெரியாமல் பயணிகள் அலைந்து திரிந்து பயணங்களை மேற்கொண்டனர்.
இந்தநிலையில், எழும்பூர் ரெயில் நிலைய நடைமேடை 10,11-ல் இரவு நேரத்தில் நடைபெற்ற பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், இதன் காரணமாக, கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் இரவு 11 மணிக்கு மேல் ரத்து செய்யப்பட்ட மின்சார ரெயில்கள் வழக்கம்போல இயக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த செய்தி பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.