தமிழக செய்திகள்

புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

குடிநீர் ஏரிகளில் 10 டி.எம்.சி. தண்ணீர் இருந்த நிலையில் தற்போது வெறும் 5 டி.எம்.சி நீர் மட்டுமே ஏரிகளில் உள்ளன.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் மொத்தம் 13 ஆயிரத்து 222(13.2டி.எம்.சி)தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பலத்த மழை பெய்து குடிநீர் ஏரிகள் நிரம்பும் என்று எதிர் பார்க்கப்பட்டது.

வங்கக்கடல்

ஆனால் வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவான 3 புயல்கள் தமிழகத்தை நெருங்காமல் ஆந்திரா நோக்கி சென்றது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. குடிநீர் ஏரிகளுக்கும் நீர்வரத்து இல்லாததால் நிரம்பாமல் உள்ளது. கடந்த ஆண்டுடன் ஓப்பிடும் போது பாதி அளவே தண்ணீர் உள்ளது.

இதேநாளில் குடிநீர் ஏரிகளில் 10 டி.எம்.சி. தண்ணீர் இருந்த நிலையில் தற்போது வெறும் 5 டி.எம்.சி நீர் மட்டுமே ஏரிகளில் உள்ளன.

இதற்கிடையே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முதல் தொடர்ந்து விட்டு,விட்டு மழை பெய்து வருகிறது. புழல், செம்பரம்பாக்கம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் ஏரிகளுக்கு கடந்த 2 வாரத்திற்கு பிறகு மீண்டும் தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது.

புழல் ஏரி

புழல் ஏரியில் இன்று காலை நிலவரப்படி 435 கனஅடி தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மி.கனஅடியில் 2268 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. சென்னை குடிநீர் தேவைக்காக 206 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

இதேபோல் செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் வரத்து 140 கன அடியாக உள்ளது. மொத்த கொள்ளளவான 3645 மி.கனஅடியில் 1228 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. குடிநீர் தேவைக்காக 186 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சோழவரம் ஏரிக்கு 145 கனஅடி தண்ணீர் வருகிறது.

பூண்டி ஏரி

இந்த ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் வெறும் 185 மி.கனஅடி தண்ணீர் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது. பூண்டி ஏரியில் வெறும் 17.42 சதவீதம் மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் 560 மி.கனஅடி தண்ணீர் இருக்கிறது. இன்று காலையும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. ெதாடர்ந்து பலத்த மழை பெய்தால் மட்டுமே குடிநீர் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து நிரம்பும் நிலை உள்ளது. தற்போது ஏரிகளில் உள்ள தண்ணீரை வைத்து 5 மாதங்களுக்கு மட்டுமே குடிநீருக்கு பயன் படுத்த முடியும்.

எனவே தற்போதைய சூழ்நிலையில் பலத்த மழை பெய்யுமா? என்று எதிர் பார்த்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

SCROLL FOR NEXT