தமிழக செய்திகள்

நில ஆவணங்களை பொதுமக்கள் பெற புதிய இணையதளம்

பொதுமக்கள் இருந்த இடத்திலேயே ஆவணங்களை பெறும் வகையில் ஆவணக்காப்பக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் ஆவணக்காப்பக இணையதளத்தை தொடங்கி வைத்தார்.

சென்னை:

தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறையின் சார்பில் 50-வது தேசிய ஆவணக்காப்பாளர்கள் குழு கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. இதில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்று, 'பொதுமக்கள் நிலஆவணங்களை எளிதில் பெறும் வகையில் முதற்கட்டமாக 1864 முதல் 1897-ம் ஆண்டு வரை (பழைய செட்டில்மென்ட் ரிஜிஸ்டர்) மற்றும் 1861 முதல் 1940-ம் ஆண்டு வரையிலான இனாம் உண்மை பதிவேடு இணையத்தில் பதிவேற்றப்பட்டு பொதுமக்கள் இருந்த இடத்திலேயே ஆவணங்களை பெறும் வகையில் www.digitamiinsduarchives.gov.in ஆவணக்காப்பக இணையதளத்தை தொடங்கி வைத்தார்.

மேலும், 'ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக 1857-ம் ஆண்டுக்கு முன்பு தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் தியாகங்கள்', 'மைசூர் போர்களும் தமிழ்நாடு கைப்பற்றப்பட்ட முறைகளும்' ஆகிய 2 நூல்களை வெளியிட்டார்.

கூட்டத்தில் தேசிய ஆவணக்காப்பக தலைமை இயக்குனர் சஞ்சய் ரஸ்தோகி, தமிழ்நாடு உயர்கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் பொ.சங்கர், தமிழ்நாடு ஆவணக்காப்பக முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையர் ஹர்சஹாய் மீனா, 20 மாநில ஆவணக்காப்பக அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT