தமிழக செய்திகள்

புதிய தலைமைச்செயலகம் அரசாணை.. அவசரக்கதியில் அரசு செயல்படகூடாது - சிபிஎம் சண்முகம்

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

தலைமைச்செயலகம்

பட்டினப்பாக்கத்தில் தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச்செயலகம் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

அவசரக்கதி

நில வகை மாற்றம் செய்து அனைவருக்கும் விரைந்து பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பொதுமக்களின் அத்தியாவசிய கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎம் சார்பில் வடசென்னை மாவட்டக் குழு சார்பாக, மிண்ட் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் பங்கெடுத்தபின் செய்தியாளரகளை சந்தித்த சிபிஎம் தலைவர் பெ . சண்முகம்

பட்டினப்பாக்கத்தில் அமையவிருக்கும் புதிய தலைமைச்செயலகம் கட்டுவதற்கான அரசாணையை அவசர அவசரமாக வெளியிட்டிருக்கிறார்கள், இந்த இடம் கடுமையான போக்குவரத்து நெருக்கடியில் சிக்கியிருக்கிறது எனபதால் யாருக்கும் இதில் மாறுப்பட்ட கருத்து கிடையாது என்றும், ஆகவே தலைமைச்செயலகத்தை பொருத்தமான வேறு ஒரு இடத்தில் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அனைத்துக் கட்சி கூட்டம்

இது போன்ற தலைமைச்செயலகம் அல்லது அரசு தலைமை அலுவலகங்கள் ஒரு நீண்ட காலத்திற்கான கட்டுமானம் என்கிற முறையில், இது போன்ற பிரச்சனைகளில் அரசு அவசரகதியில் செயல்படக்கூடாது என்பதை வற்புறுத்த விரும்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

எதிர்ப்பு

ஏற்கனவே பட்டினப்பாக்கத்தில் பல மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் அவர்கள் இந்த புதிய திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அவர்களின் குரலுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

இந்த புதிய தலைமைச்செயலக விவகாரத்தில் பல்வேறு கட்சிகள் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர். இதில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் தமிழ்நாடு அரசாங்கம் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் பெ. சண்முகம் கூறியிருக்கிறார்.

SCROLL FOR NEXT