தமிழ்நாட்டிற்கான புதிய தலைமைச் செயலகத்தை, சென்னை பட்டினப்பாக்கத்தில் கட்டுவது தொடர்பான தவெக அரசின் முடிவை எதிர்த்து, திமுக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையை ரத்து செய்யக் கோரி, மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் த.வேலு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
மேலும் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கவும் கோரியுள்ளார்.
விரிவான திட்ட அறிக்கை, மதிப்பீடுகள் மற்றும் கட்டடத்திற்கான வடிவமைப்புகள் தயாரிக்கப்படுவதற்கு முன்பே, இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு, திட்ட செலவும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் வேலு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அரசாணையில், போக்குவரத்து பாதிப்பு ஆய்வு, சுற்றுச்சூழல் மதிப்பீடு, சமூக தாக்க ஆய்வு அல்லது மாற்று இடங்களை ஒப்பிடும் ஆய்வு ஆகியவை குறித்த குறிப்புகள் இல்லாதது குறித்தும் மனுவில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் துறை, தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம், மீன்வளத் துறை, சென்னை போக்குவரத்து காவல்துறை மற்றும் சென்னை பெருநகர அபிவிருத்தி ஆணையம் உள்ளிட்ட துறைகள் மற்றும் அதிகார அமைப்புகளிடமிருந்து எந்தவொரு கருத்தையோ அல்லது அனுமதியையோ பெறாமலேயே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பட்டினப்பாக்கத்தைச் சுற்றி ஒன்பது மீனவக் கிராமங்கள் அமைந்துள்ளன. மேலும், 1,500-க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் அங்கு வசித்து வருகின்றனர்.
தங்கள் அடிப்படை வாழ்வாதாரமான மீன்பிடித் தொழிலுக்கு பயன்படுத்தும் படகுகளை இறக்குவதற்கும், நிறுத்துவதற்கும், மீன்பிடி வலைகளைப் பழுதுபார்ப்பதற்கும், தாங்கள் பிடித்த மீன்களை விற்பதற்கும் கடற்கரைக்கான தடையற்ற அணுகலைச் சார்ந்துள்ளனர்.
இந்தச் சூழலில் அவர்களிடம் கலந்தாலோசிக்காமல், தவெக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
தவெக அரசால் முன்மொழியப்பட்டுள்ள இந்த புதிய தலைமைச் செயலக வளாகம் சுமார் 25.55 ஏக்கர் பரப்பளவில், கிட்டத்தட்ட 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் தலைமைச் செயலகம் கட்டப்படும் என்ற இதுதொடர்பான அறிவிப்பை கடந்த 3ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் வெளியிட்டார்.
சென்னை பட்டினப்பாக்கம் இடத்தேர்வாக அறிவிக்கப்பட்டதில் இருந்தே கண்டனங்கள் எழுந்தநிலையில், இடத்தேர்வுக்கு இன்னும் இறுதி ஒப்புதல் வழங்கப்படவில்லை என அரசு கூறியுள்ளது.
இதுவரை அரசாணை மட்டுமே பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தத் திட்டத்தின் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து, விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் முதலமைச்சர் விஜய் இறுதி முடிவு எடுப்பார் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செப்டம்பர் 20 அன்று தெரிவித்தார்.