தமிழக செய்திகள்

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தில் புதிய தளர்வு: வெளிமாநிலங்களில் வசிக்கும் தமிழ்நாட்டு தாய்மார்களுக்கும் இனி 1 கிராம் தங்க மோதிரம்!

தாய் வீட்டின் முகவரி ஆவணத்தை சமர்ப்பித்து சலுகையைப் பெறலாம் என தமிழ்நாடு சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தி வரும் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில்’ வெளிமாநிலங்களில் வசித்து வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தாய்மார்களும் பயன்பெறும் வகையில், அதன் தகுதி நிபந்தனைகளில் முக்கியத் தளர்வுகளைச் செய்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டைச் சொந்த ஊராகக் கொண்டு, வேலை அல்லது வாழ்வாதாரம் காரணமாக வெளிமாநிலங்களில் வசித்து வரும் பெண்கள், பிரசவத்திற்காகத் தாயகம் திரும்பித் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தை பெற்றெடுத்தால், அவர்களுக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குப் கர்ப்பிணிப் பெண்ணின் பெற்றோர்கள் (குழந்தையின் தாய்வழி தாத்தா-பாட்டி) தமிழ்நாட்டின் நிரந்தரக் குடிமக்கள் என்பதற்கான இருப்பிடச் சான்று அல்லது உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்தால் போதுமானது. இதன் மூலம், வெளிமாநிலங்களில் வசித்தாலும் தமிழகத்தைச் சேர்ந்த தாய்மார்களுக்கு இத்திட்டத்தின் பலன் முழுமையாகக் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

முக்கிய அம்சங்கள்

குழந்தை கட்டாயம் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்டத் தலைமை மருத்துவமனைகள் அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்திருக்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் அனைவரும் சுகாதாரத்துறையின் PICME (Pregnancy and Infant Cohort Monitoring and Evaluation) அமைப்பில் பதிவு செய்து RCH ID பெற்றிருக்க வேண்டும். பிரசவம் முடிந்து தாய் மற்றும் சேய் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குச் செல்லும்போது 22 காரட் எடையுள்ள ஒரு கிராம் தங்க மோதிரம் நேரடியாக அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.

மகப்பேறு நலனை ஊக்குவிக்கும் அரசு

அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், தாய்மை மற்றும் குழந்தை பிறப்பைப் போற்றும் பண்பாட்டு மரபைப் பிரதிபலிக்கும் வகையிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது செய்யப்பட்டுள்ள இந்த நிபந்தனைத் தளர்வு, வெளிமாநிலங்களில் வாழும் லட்சக்கணக்கான தமிழ் குடும்பங்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

SCROLL FOR NEXT