தமிழக செய்திகள்

ரேஷன் கடையில் தரமான அரிசி புதிய நடைமுறை- மத்திய அரசு நடவடிக்கை

‘ஆர்.எம்.டி' என்ற புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரக்குழு தனது அதிகாரப்பூர்வ ஒப்புதலை வழங்கியுள்ளது.

ரேஷன் கடையில் தரமான அரிசி வழங்க புதிய நடைமுறையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

கையிருப்பு

இந்திய உணவுக் கழகத்தின் மத்திய சேமிப்புக் கிடங்குகளில் முன்னெப்போதும் இல்லாத அளவில் 122.64 மில்லியன் டன் உணவுத்தானியங்கள் கையிருப்பில் உள்ளன. இதில் 53.41 மில்லியன் டன் கோதுமை, 0.9 மில்லியன் டன் சிறுதானியங்கள் மற்றும் 42.84 மில்லியன் டன் நெல் உள்பட மொத்தம் 68.34 மில்லியன் டன் அரிசி அடங்கும்.

இந்த அரிசி ஒவ்வொரு மாநிலத்திற்கும் வழங்கப்பட்டு, ரேஷன் கடைகள் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது. அதன்படி, இந்த அரிசியின் தரத்தை உயர்த்தும் நோக்கில், மத்திய அரசு புதிய முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதாவது, ரேஷன் அரிசியில் உடைந்த அரிசியின் (குருணை) அளவைக் கணிசமாகக் குறைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக ‘ஆர்.எம்.டி' என்ற புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரக்குழு தனது அதிகாரப்பூர்வ ஒப்புதலை வழங்கியுள்ளது.

குருணை அளவு

மத்திய அரசின் இந்த புதிய விதிமுறைகளின்படி, ரேஷன் கடைகளுக்கு வரும் அரிசியில் குருணையின் அளவு பெருமளவு குறைந்து, அதன் தரம் நன்றாக இருக்கும். பச்சை அரிசியில் இதுவரை 25 சதவீதமாக இருந்த உடைந்த அரிசியின் அளவு, இனி 10 சதவீதமாகக் குறைக்கப்படும். புழுங்கல் அரிசியில் இதுவரை 16 சதவீதமாக இருந்த உடைந்த அரிசியின் அளவு, இனி 5 சதவீதமாகக் குறைக்கப்படும்.

முன்னதாக இந்த திட்டம், ஆந்திராவில் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. அதற்காக அங்குள்ள ஆலைகளில் நெல் அரைக்கும்போது கிடைக்கும் உடைந்த அரிசி, அரிசி ஆலைகளிடமே ஒப்படைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ஆலைகளுக்கு அரசு சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இந்த வெற்றிகரமான முறையைத் தழுவியே தற்போது நாடு தழுவிய அளவில் புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் 100 கிலோ நெல்லில் இருந்து கிடைக்கும் அரிசியில் குருணையின் அளவு குறைக்கப்பட்டு, உயர்தர முழு அரிசி பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.