சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம், மாதவரத்தில் புதிய பஸ்நிலையங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இதன் காரணமாக சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறைந்து உள்ளது. இதேபோல் திருமழிசை அடுத்த குத்தம்பாக்கம் கிராமத்தில் புதிய பஸ் நிலையம் 24.8 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டு உள்ளது. இங்கிருந்து திருத்தணி, காஞ்சிபுரம், வேலூர், ஓசூர், கிருஷ்ணகிரி, பெங்களூரு மற்றும் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு செல்லும் அரசு மற்றும் ஆம்னி பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
முதலில் கடந்த 2021-ம் ஆண்டு ரூ.150 கோடியில் 5 லட்சம் சதுரடி பரப்பளவில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணிகள், தொடங்கியது. பின்னர் காவல் நிலையம், பணிமனை, குளிர்சாதன வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு திட்டமதிப்பு ரூ.427 கோடியாக திருத்தி அமைக்கப்பட்டது. தற்போது புதிய பஸ்நிலைய பணிகள் முழுவதும் முடிந்து திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த புதிய பஸ்நிலையத்தில் பயணிகளின் வசதிக்கு பேட்டரி வாகன வசதி, நகரும்படிக்கட்டு, உணவகம், பயணிகள், டிரைவர்கள் தங்கும் இடம், கழிவறைவசதி, இருசக்கரம் மற்றும் கார்கள் நிறுத்தும் இடவசதி, போலீஸ்நிலையம், மருந்தகம் மற்றும் சிகிச்சை மையம், சுமார் 200-க்கும் மேற்பட்ட பஸ்களை நிறுத்தும் வசதி, வெளியூர் செல்லும் பஸ்களை நிறுத்த தனித்தனி நடைமேடைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
70 வெளியூர் பஸ்கள், 30 ஆம்னி பஸ்கள், 36 மாநகரபஸ்கள், 48 வெளியூர் பேருந்துகள், 27 ஆம்னி பஸ்களை நிறுத்தி வைக்க இடவசதி உள்ளது. மேலும் 1,680 இருசக்கர வாகனங்கள், 235 கார்களை நிறுத்தும் வசதிகள் உள்ளன. பஸ்நிலையத்தில் 41 கடைகள், கட்டுப்பாட்டு அறை, 6 இடங்களில் நகரும் படிகள் உள்ளன. பஸ் நிலையத்தின் உள்பகுதி முழுவதும் விமான நிலையம் போல் காட்சி அளிக்கிறது. அழகிய வண்ண படங்களும் கவரும் வகையில் வரையப்பட்டு உள்ளன. கூடுதல் வசதியுடன் அமைக்கப்பட்டு உள்ள குத்தம்பாக்கம் பஸ் நிலையத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து பஸ் நிலைய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
குத்தம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 300 சென்னை மாநகர பஸ்கள், 600 எஸ்.இ.டி.சி. பேருந்துகள், அண்டை மாநில பஸ்கள் என மொத்தம் 986 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதில் வார நாட்களில் 30 ஆயிரம் பயணிகளும் விடுமுறை காலங்களில் 40 ஆயிரம் பயணிகளும், திருவிழா காலங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்யும் வகையில் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இங்கிருந்து வேலூர், சேலம், தர்மபுரி போன்ற மேற்கு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் சீராக செய்யப்பட்டுள்ளது.
குத்தம்பாக்கம் பஸ்நிலையத்திற்கு தனியாக ஒரு காவல் நிலையமும் அமைக்கப்படும். இந்த பஸ் நிலையம் மூலம் கோயம்பேடு மற்றும் பூந்தமல்லி பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசல் குறையும். இதேபோல் வேலூர், ஓசூர் மற்றும் பெங்களூரு செல்லும் பயணிகளுக்குப் பயண நேரம் கணிசமாக மிச்சமாகும். மேலும் சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்துடன் குத்தம்பாக்கம் இணைக்கப்படுவதால் பயணிகள் நகரின் எந்தப் பகுதியில் இருந்தும் எளிதாக இந்த முனையத்தை அடைய முடியும்.
பஸ் நிலையத்திற்கு அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் என பெயர் வைத்து உள்ளோம். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பஸ் நிலையத்திற்கு வரும் வகையில் தகவல் பலகையும் வைத்துள்ளோம். சட்டமன்ற தேர்தலால் திறப்பு விழா தள்ளிப்போனது. தற்போது புதிய ஆட்சி அமைந்துள்ளதால் விரைவில் பஸ் நிலையம் திறப்பு விழா நடத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.