தமிழ்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்துவது தொடர்பாக சுற்றுலா துறை அமைச்சர் ராஜேஷ்குமார் 2 நாட்கள் அதிகாரிகளுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டார்.
முதல் நாள் சுற்றுலாத் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். 2-வது நாளான இன்று சுற்றுலா வளர்ச்சிக்கழக மாவட்ட அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் அரசு முதன்மை செயலாளர் டாக்டர் எஸ்.சுவர்ணா, இயக்குனர் ராஜகோபால் சுன்கரா, பொது மேலாளர் லட்சுமி பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதல் நாள் கூட்டத்தில் சுற்றுலா மேம்பாட்டுக்கான புதிய திட்டங்கள் அனைத்து சுற்றுலா தலங்களிலும் செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள், சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்கு என்னென்ன வசதிகள் செய்யப்பட வேண்டும் என்பது பற்றி விரிவாக ஆலோசனை நடத்தினார்கள்.
மேலும் அரசின் சுற்றுலா துறை தொடர்பான அறிவிப்புகளுக்கு செயல்வடிவம் கொடுப்பது பற்றியும் விரிவாக ஆலோசித்தனர். மேலும் கடந்த 5 ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பணிகள் இன்னும் முடிவடையாத பணிகள் தொடர்பாக விவாதித்தனர்.
2-ம் நாளான இன்று சுற்றுலாத்துறைக்கு சொந்தமான ஓட்டல்கள், படகு குழாம்கள் உள்ளிட்ட சுற்றுலா இடங்களை மேம்படுத்துவதற்கான புதிய ஏற்பாடுகள் பற்றி ஆலோசித்தனர். கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு, குற்றாலம், மகாபலிபுரம் போன்ற பிரபலமான சுற்றுலா இடங்களில் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் பற்றியும் விவாதித்தனர். அனைத்து மாவட்டங்களிலும் அமைந்துள்ள சுற்றுலா இடங்களை தவிர புதிதாக சுற்றுலா இடங்கள் உருவானால் அவற்றை மேம்படுத்துவதற்கான திட்ட அறிக்கைகளையும் தயார் செய்து அனுப்பும்படி அமைச்சர் ராஜேஷ்குமார் கேட்டுக் கொண்டார்.
வரும் ஆண்டுகளில் உள்ளூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பயணிகள் தமிழக சுற்றுலா தலங்களுக்கு அதிக அளவில் வந்து செல்லவும் அவர்கள் மகிழ்ச்சியுடன் திரும்பி செல்லும் வகையிலும் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.