சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்களில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர். இருப்பினும், அலுவலக நேரங்களில் ஏற்படும் நெரிசல் காரணமாக ரெயில் படியில் தொங்கியபடி பயணம் செய்து தவறி விழும் சம்பவங்களும் நிகழ்கின்றன. இதை தவிர்க்க, தானியங்கி கதவுகளுடன் கூடிய புதிய மின்சார ரெயில்களைத் தயாரிக்க ரெயில்வே வாரியம் முடிவு செய்தது.
அதற்கேற்ப புதிய வடிவமைப்பை தயாரித்து வழங்கும் பணி சென்னையில் உள்ள ஐ.சி.எப். ஆலையிடம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒப்படைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தானியங்கி கதவுடன் கூடிய முதல் ரெயிலை தயாரிக்கும் பணி கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கியது. இப்பணி கடந்த மாதம் முடிவடைந்தது. பல கட்ட சோதனைக்குப் பிறகு, இந்த ரெயில் மும்பைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ஐ.சி.எப். அதிகாரிகள் கூறியதாவது:- மும்பை, சென்னையில் தான்' அதிக அளவில் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் பல லட்சம் பேர் பயணிக்கும் நிலையில், அலுவலக நேரங்களில் 10 நிமிடங்கள் ரெயில் தாமதமானாலும், ரெயில்களில் அதிக அளவில் நெரிசல் ஏற்படுகிறது. எனவே, நெரிசல் மிகுந்த நேரங்களில் கூடுதல் மின்சார ரெயில்களை இயக்க அனைத்து மண்டலங்களுக்கும் ரெயில்வே அறிவுறுத்துகிறது.
அதேபோல, ஏசி வசதி இல்லாத, தானியங்கி கதவுகளுடன் கூடிய 12 பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரெயிலை தயாரித்து, மும்பைக்கு அனுப்பி உள்ளோம். கூடுதல் இடவசதி, நல்ல காற்றோட்டம் கிடைக்கும் வகையில் பெட்டி வடிவமைக்கப்பட்டு உள்ளது. அடுத்த 30 நாட்களில் 2-வது ரெயிலைத் தயாரித்து மும்பைக்கு அனுப்ப உள்ளோம். பயணிகள் வரவேற்பை பொறுத்து, தேவைப்பட்டால், இந்த ரெயில்களில் புதிய மாற்றங்கள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.