தமிழ்நாடு சட்டசபை உறுப்பினர்கள் அனைவருக்கும் அரசு சார்பில் புதிய கார்கள் வழங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பைத் தொடர்ந்து, முதற்கட்டமாக மகேந்திரா நிறுவனத்தின் சொகுசு கார்கள் சோதனை ஓட்டத்திற்காக சென்னை தலைமைச் செயலக வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், மாநிலத்தின் உள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தொகுதிப் பணிகளை தடையின்றி மேற்கொள்வதற்காக அரசு சார்பில் புதிய கார்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் விஜய் வெளியிட்டார்.
கார்கள் மட்டுமின்றி, அவற்றை முறையாகப் பராமரிப்பதற்காக மாதந்தோறும் ரூ. 75,000 பராமரிப்புப் படி வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
முதலமைச்சரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து நேற்று பேரவையில் பேசிய சில உறுப்பினர்கள், "கார்கள் வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. எனினும், மக்கள் பிரதிநிதிகளின் நீண்டதூரப் பயணங்களுக்கும், பாதுகாப்பு வசதிகளுக்கும் ஏதுவாக 'டொயோட்டா இன்னோவா' ரக கார்களை வழங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும்" என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
உறுப்பினர்களின் கோரிக்கைகள் மற்றும் பல்வேறு கார் நிறுவனங்களின் மாடல்கள் பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான மகேந்திரா நிறுவனத்தின் கார்கள் தலைமைச் செயலகத்திற்கு கொண்டு வரப்பட்டன.
அங்கு மகிந்திரா நிறுவனத்தின் பிரபலமான மாடல்களான XUV, 7XO, பொலிரோ நியோ ஆகிய கார்களை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் பார்வைக்காகவும், டெஸ்ட் டிரைவ் செய்வதற்காகவும் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கார்களின் மைலேஜ், பாதுகாப்பு வசதிகள், பராமரிப்புச் செலவுகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் சொகுசுப் பயணம் ஆகியவற்றைக் கணக்கிட்டு, எந்த கார் இறுதி செய்யப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.