புதிய படகு தற்போது கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் உள்ளது. இவை இரண்டையும் இணைக்கும் வகையில் கண்ணாடி பாலமும் அமைக்கப்பட்டு இருக்கிறது.
விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிடவும், அவற்றுக்கு கண்ணாடி பாலத்தில் நடந்து செல்லவும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது.
இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய பெயர்களில் 3 சாதாரண படகுகளும், திருவள்ளுவர் மற்றும் தாமிரபரணி ஆகிய பெயர்களில் 2 அதிநவீன சொகுசு படகுகளும் இயக்கப் படுகின்றன. தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவெளி இன்றி தொடர்ச்சியாக இந்த 5 படகுகளும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்ல ரூ.12 கோடி செலவில் பெருந்தலைவர் காமராஜர், மார்ஷல் நேசமணி, ஜி.யு.போப் ஆகியோரின் பெயரில் கூடுதலாக 3 புதிய படகுகள் வழங்கப்படும் என்று கன்னியாகுமரியில் நடந்த திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி இந்த 3 புதிய படகுகளும் கோவாவில் வடிவமைக்கப்பட்டு வந்தன. அதில் பெருந்தலைவர் காமராஜர் பெயரை தாங்கிய ரூ.4 கோடி மதிப்பிலான புதிய படகு கோவாவில் இருந்து கடல் மார்க்கமாக இன்று காலை கன்னியாகுமரிக்கு வந்து சேர்ந்தது. இந்த புதிய படகு தற்போது கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.