Keerthana  
தமிழக செய்திகள்

புதிய விமான நிலையம் எங்கு அமைகிறது? ஓசூரா? ராமேஸ்வரமா? - அமைச்சர் கீர்த்தனா விளக்கம்!

கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் திரும்ப விவசாயிகளுக்கு அளிக்கப்படாது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது, புதிய விமான நிலையங்கள் அமைப்பது குறித்து தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா முக்கிய விளக்கங்களை அளித்துள்ளார்.

ஓசூரா? ராமேஸ்வரமா?

பரந்தூர் திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் மற்ற பகுதிகளான ஓசூர் மற்றும் ராமேஸ்வரம் ஆகிய இரண்டு இடங்களிலுமே புதிய விமான நிலையங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் இடத் தேர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரம் அருகே புதிய கிரீன்ஃபீல்ட் விமான நிலையம் அமைப்பதற்காக உச்சிப்புளி அல்லது கீழக்கரை ஆகிய இரண்டு உத்தேச இடங்கள் தேர்வு செய்யப்பட்டு சாத்தியக்கூறு ஆய்வுகள் நடந்து வருகின்றன.

ஓசூரிலும் புதிய உள்நாட்டு விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் பரிசீலனையில் உள்ளன என்று சட்டசபையில் அமைச்சர் கீர்த்தனா கூறியுள்ளார்.

மாற்றுத் தொழில் திட்டங்கள்

பரந்தூரில் முன்மொழியப்பட்ட சென்னையின் 2-வது விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாகக் குறிப்பிட்டார்.

பரந்தூரில் அதிகளவில் நீர்நிலைகள் உள்ளதால், அங்கு விமான நிலையம் அமைத்தால் சென்னைக்கு கடுமையான வெள்ள அபாயம் ஏற்படும் என்ற காரணத்தினால் இத்திட்டம் ரத்தாகியுள்ளதாக அவர் விளக்கமளித்தார்.

ஏற்கனவே மக்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களை வீணாக்காமல், அங்குள்ள மக்களுக்கும் மண்ணுக்கும், குறிப்பாக விவசாயிகளுக்கும் எந்தவித இடையூறும் இல்லாத வகையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுத் தொழில் திட்டங்கள் விரைவில் தொடங்கப்படும் என்றும் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் திரும்ப விவசாயிகளுக்கு அளிக்கப்படாது என்றும் சட்டசபையில் அமைச்சர் கீர்த்தனா அறிவித்தார்.

இறுதி முடிவு என்ன?

சட்டசபையில் இன்று தொழில்துறை மற்றும் சிவில் விமான போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றதால், அதற்குப் பதிலளித்துப் பேசுவதற்காக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா இந்த விமான நிலையத் திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல புதிய முதலீடுகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்ட போதே, சென்னையின் இரண்டாவது விமான நிலையமான பரந்தூர் திட்டம் கைவிடப்பட்டது குறித்தும், அதற்கு மாற்றாக ஓசூர் மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளில் புதிய விமான நிலையங்களுக்கான இடத் தேர்வுகள் தீவிரமாக நடந்து வருவது குறித்தும் அமைச்சர் விரிவாக விளக்கமளித்துப் பேசினார்.