நெல்லை மென்பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கில், தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி சுர்ஜித்தின் பெற்றோரான காவல்துறை சார்பு ஆய்வாளர்கள் சரவணன், கிருஷ்ணகுமாரி மீதான குற்றப்பத்திரிகையை அண்மையில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, ரத்து செய்தது .
இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தது. மேலும் தமிழ்நாடு அரசு இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவேண்டும் எனவும் அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து அரசு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் கவின் செல்வ கணேஷ் (27), கடந்த ஆண்டு ஜூலை 27 அன்று நெல்லை பாளையங்கோட்டையில் சுர்ஜித்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
சுர்ஜித்தின் சகோதரியும், கவினும் பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்தனர். கவின் பட்டியலினத்தைச் சார்ந்தவர் என்பதால், இருவரையும் சுர்ஜித் குடும்பத்தினர் கண்டித்து வந்தனர்.
இச்சூழலில் சுர்ஜித் குடும்பத்தினர் திட்டமிட்டு கவினை கொலை செய்தனர். கடந்தாண்டு இந்த வழக்கு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு தொடர்பாக பெண்ணின் சகோதரர் சுர்ஜித், தந்தை சரவணன், உறவினர் ஜெயபால் ஆகியோரை போலீசார் முதலில் கைது செய்தனர்.
பின்னர் 9 மாதங்களுக்குப் பிறகு சுர்ஜித்தின் தாயாரும், எஸ்.ஐ.யுமான கிருஷ்ணகுமாரியையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடியாக கைது செய்திருந்தனர்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் கடந்த மாதம் 29-ந்தேதி விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார், சுர்ஜித் பெற்றோரான சரவணன், கிருஷ்ணகுமாரி மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்பட்டதை அடுத்து, கவினின் பெற்றோர் நீதி கேட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு சார்பில் உரிய மேல்முறையீடு செய்யப்படும் என அரசுத் தரப்பில் அளிக்கப்பட்ட உறுதியை அடுத்து அவர்களது போராட்டம் கைவிடப்பட்டது.
அதன்படி, தற்போது தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.