தமிழக செய்திகள்

நெல்லையில் 5 வயது மகன், தந்தை கொடூர கொலை - கனிமொழி கண்டனம்

மெத்தனமாக செயல்படாமல் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய திமுக எம்பி கனிமொழி வலியுறுத்தல்.

கல்லிடைக்குறிச்சி-திருநெல்வேலி நெடுஞ்சாலையில் உள்ள வல்லத்து நம்பிகுளம் அருகே காளிமுத்து (40 வயது) என்பவரும் அவரது 5 வயது மகனும் இரு சக்கர வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்தனர். அப்போது ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று காரில் வந்து அவர்கள் சென்ற வாகனத்தை மோதியது.

இதில் இருவரும் கீழே விழுந்தனர். பின்னர் அந்த கும்பல் அவர்களை தாக்கி, காளிமுத்துவை வெட்டிக்கொன்று அவரது தலையை துண்டித்தது. துண்டித்த தலையை ஒரு பையில் வைத்து பிரதான நெடுஞ்சாலையில் வீசிச் சென்றனர். மேலும் இந்த தாக்குதலில் அவரது ஐந்து வயது மகனும் உயிரிழந்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், நீண்ட கால விரோதம் காரணமாக இந்த பழிவாங்கும் சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிவித்தனர்.

இச்சம்பவத்துக்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே தந்தையும் 5 வயது மகனும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

சட்டம் ஒழுங்கு முழுவதும் சீர்கெட்டுவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு என்ற ஒன்றே இல்லாமல் ஆகிவிட்டது. தவெக அரசு, முன்விரோதம் காரணமாகத் தொடரும் இப்பிரச்சனையில் மெத்தனமாக செயல்படாமல் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, அப்பகுதியில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.