தமிழக செய்திகள்

நம்மை கைகட்டி நிற்க வைக்கும் முயற்சியாகதான் நீட் தேர்வு உள்ளது: இயக்குநர் வெற்றிமாறன்

நம்மிடமிருந்து மருத்துவ கல்வியையும், மருத்துவ அறிவையும் முழுமையாக எடுப்பது தான் அவர்களின் நோக்கமாக உள்ளது.

சென்னை எழும்பூரில் நீட் தேர்வுக்கு எதிராக நீலம் மாணவர் அமைப்பின் சார்பாக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் வெற்றிமாறன், அமீர், பா.ரஞ்சித், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல தமிழ் திரைபிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இந்த போராட்டத்தில் இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது:-

காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டத்திற்கு நம்முடைய ஆதரவை தெரிவித்து கொள்கிறோம். ஒரு நாட்டில் மாணவர் போராட்டத்திற்கு வருகிறார்கள் என்றால், அந்த நாட்டில் மற்ற அமைப்புகள் எதுவும் சரியாக செயல்படவில்லை என்று தான் அர்த்தம்.

அதனால்தான் மாணவர்கள் போராட்டத்திற்கு வந்துள்ளனர். ஒரு மாணவர் போராட்டம் என்பது, அரசினுடைய தோல்வியாக உள்ளது. நீட்-இன் தாக்கம் என்ன என்பதை என்னால் இப்போது பார்க்க முடிகிறது.

என்னுடைய நண்பர்களுடைய பிள்ளைகள் இரண்டு பேர், அதில் ஒரு பையன் 1176 மதிபெண்கள் பெற்றார். ஆனால் முதல் வருடம் அந்த மாணவனால் நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை.

இப்பொழுது இந்த வருடமும் அவன் தந்தையின் சக்திக்கு ஏற்ப, ஒரு கல்லூரியில் சீட் வாங்கும் நிலையில் அவர்கள் இல்லை. அவன் நன்றாக புரிதலோடு படிக்கக்கூடிய மாணவன்.

அதுபோல் மற்றொரு நண்பருடைய மகளும் படித்துக் கொண்டிருக்கிறாள். அந்த மாணவியும் ஒரு வருடம், வீட்டில் இருந்து படித்து கொண்டிருக்கிறார்கள்.

இங்கே நீட்-இன் மூலமாக நம்மிடமிருந்து மருத்துவ கல்வியை முழுமையாக எடுப்பதும், மேலும் மருத்துவ அறிவை முழுமையாக எடுப்பதும் தான் அவர்களின் நோக்கமாக உள்ளது.

இது திரும்பவும் நம்மை அவர்கள் முன்பு கைகட்டி நிற்கும் நிலைக்கு கொண்டு செல்லும் முயற்சியாகதான் உள்ளது. இந்த நீட் தடைக்கு நாம் தொடர்ந்து செயல்பட்டு கொண்டே இருக்க வேண்டும்.

இதற்கு எதிராக செயல்பாட்டாளர்கள் தொடர்ந்து செயல்படும்போது, அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம். இந்த போராட்டத்தை முன்னெடுத்திருக்கும் நீலம் மாணவர் அமைப்பிற்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த போராட்டத்தில் அவர் கூறினார்.