தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளபடி, 2026-ம் ஆண்டிற்கான நீட் மறுதேர்வு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்வு எழுத செல்லும் மாணவ-மாணவிகளின் வசதிக்காக வழக்கமான வாரநாட்கள் அட்டவணைப்படி மின்சார ரெயில் சேவை இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நீட் தேர்வு நடைபெறும் நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால், மாணவர்களின் வசதிக்காக வாரநாட்கள் அட்டவணைப்படி மின்சார ரெயில் சேவை இயக்கப்பட உள்ளது. மேலும், முக்கிய ரெயில் நிலையங்களில் சிறப்பு நீட் உதவி மையங்களும் அமைக்கப்பட உள்ளன. அரக்கோணம் ரெயில் நிலையத்தில் தற்போது நடைபெறும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரையில் இருந்து அரக்கோணம், திருத்தணி வழித்தடத்தில் மட்டும் தற்போது உள்ள அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கப்படும். அதேபோல, சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் இயக்கப்படும் ஏ.சி.மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படியே இயக்கப்படும். இவை தவிர மற்ற அனைத்து வழித்தடங்களிலும் வாரநாட்களுக்கான கால அட்டவணை பின்பற்றப்படும்.
தேர்வு எழுதச் செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களுடன் வரும் பெற்றோர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்க சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஆவடி, திருவள்ளூர் மற்றும் காட்பாடி ஆகிய 9 முக்கிய ரெயில் நிலையங்களில் பிரத்யேக நீட் உதவி மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இந்த உதவி மையங்கள் மூலம் ரெயில்களின் விவரங்கள், உள்ளூர் போக்குவரத்து வசதிகள் மற்றும் தேர்வு மையங்களுக்குச் செல்வதற்கான வழிகள் குறித்த தகவல்கள் பயணிகளுக்கு வழங்கப்படும். தேர்வு எழுத செல்பவர்கள் சிரமமின்றி, சரியான நேரத்திற்கு சென்றடைய இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனவே, தேர்வு எழுத செல்லுபவர்கள் இதற்கேற்ப திட்டமிட்டு பயணிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.