எம்.பி.பி.எஸ். மற்றும் பிற மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி, மதுரை, கோவை என 30 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் 552 நகரங்களில் இந்த தேர்வு நடக்கிறது.
இந்த ஆண்டு நீட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு கடந்த பிப்ரவரி 8-ந் தேதி தொடங்கிய நிலையில், மார்ச் 8-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. நாடு முழுவதும் 22 லட்சத்து 79 ஆயிரத்து 743 மாணவர்கள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். இதில் மாணவர்கள் 9 லட்சத்து 46 ஆயிரத்து 815 பேர், மாணவிகள் 13 லட்சத்து 32 ஆயிரத்து 928. மொத்த விண்ணப்பதார்களில் 58 சதவீதம் பேர் பெண்கள் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. தேர்விற்கான ஹால் டிக்கெட் கடந்த 26-ந் தேதி வெளியானது.
நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெற உள்ளது. மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். தாவரவியல் மற்றும் விலங்கியலை உள்ளடக்கிய உயிரியல் பாடத்தில் இருந்து 360 மதிப்பெண்களுக்கும், இயற்பியல் மற்றும் வேதி யியல் பாடங்களில் தலா 180 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் இடம்பெறும். தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும்.
இந்த முறை தேர்வு மையங்களில் செயற்கை நுண்ணறிவு(ஏ.ஐ.) முறையில் கண்காணிப்பு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மேலும் பயோமெட்ரிக் சரிபார்ப்பு மற்றும் ஜி.பி.எஸ். மூலம் கண்காணிக்கப்படும் வினாத்தாள்களையும் பயன்படுத்த உள்ளனர்.
தேர்வின்போது விண்ணப்பதாரர்களை உறுதிப்படுத்தவும் ஆள்மாறாட்டத்தைத் தடுக்கவும் என்.டி.ஏ.கைரேகை ஸ்கேனிங் மற்றும் முக அங்கீகாரத்தைப் பயன்படுத்தும் ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பும் செய்யப்பட உள்ளது.
நுழைவு வாயிலில் பாதுகாப்புச் சோதனைகளை தொடர்ந்து தேர்வர்கள் மெட்டல் டிடெக்டர்கள், டிஜிட்டல் ஸ்கேனிங் மற்றும் நேரடி சோதனைகள் மூலம் சோதனை செய்யப்படு வார்கள். தேர்வு மையங்களில் வழக்கமான சி.சி.டி.வி. கேமராக்களுக்குப் பதிலாக, ஏ.ஐ. இயக்கும் கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.
இவை தேர்வு அறையில் நடக்கும் சந்தேகத்திற்கிடமான அசைவுகள், மாணவர்களின் தேவையற்ற பேச்சு மற்றும் பிற முறைகேடுகளை உடனுக்குடன் கண்டறிந்து கட்டுப்பாட்டு அறைக்கு எச்சரிக்கை அனுப்பும்.
மின்னணுத் தொடர்பு மூலம் நடைபெறும் மோசடியைக் கட்டுப்படுத்த, மையங்களில் உயர் அதிர்வெண் ஜாமர்கள் பொருத்தப்பட உள்ளன. இந்த அமைப்புகள் மொபைல் நெட்வொர்க்குகள், புளூடூத் சாதனங்கள் மற்றும் 5ஜி சிக்னல்களைக் கூடத் தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
வினாத்தாள் கசிவுகளைத் தடுப்பதற்காக காவல்துறை பாதுகாப்புடன் ஜி.பி.எஸ். தொழில்நுட்ப கண்காணிப்பின் கீழ் கொண்டு செல்லப்படுகின்றன. தேர்வு நாளன்று பயோமெட்ரிக் சரிபார்ப்பில் சாதனக் கோளாறுகள், இணைய இணைப்புப் பிரச்சனைகள் அல்லது பிற காரணங்களால் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், தேர்வுக் கூடத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். ஒரு எளிய எழுத்துப்பூர்வ உறுதிமொழியை மட்டும் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முறைகேடு கண்டறியப்பட்டால், தேசிய தேர்வு முகமை நடத்தும் அனைத்துத் தேர்வுகளிலும் பங்கேற்பதில் இருந்து நிரந்தரமாகத் தடை விதிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.