சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்  
தமிழக செய்திகள்

நீட் தேர்வு ரத்து தீர்மானம்- கடும் விவாதத்திற்கு பிறகு ஒருமனதாக நிறைவேற்றம்

டெல்லி போராட்டத்திற்கு ராகுல் காந்தி ஆதரவு தந்தது தொடர்பாக அமைச்சர் விஸ்வநாதன் பேசியதற்கு தி.மு.க. எம்.எல்ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பாஜகவை தவிர எஞ்சிய கட்சிகளின் முழுமையான ஆதரவுடன் நீட் தேர்வுக்கு எதிரான தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசினர் தனித்தீர்மானத்தை சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் கொண்டு வந்தார். நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்பட்டதை கூறி தனித்தீர்மானத்தை உறுப்பினர்கள் நிறைவேற்றி தருமாறு கேட்டுக்கொண்டார். அதனை தொடர்ந்து தனித்தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது.

தனித்தீர்மானத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட், பாமக, அதிமுக, மஜக, திமுக ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதனிடையே தி.மு.க. எம்.எல்.ஏ. பேசியது தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிரான தனித் தீர்மானத்திற்கு காங்கிரஸ் தரப்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன் பேசுகையில், மாணவர்கள் சமூகத்திற்கும் இனியும் இழுக்கு ஏற்படக்கூடாது என தனித்தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார் முதலமைச்சர். நீட் தேர்வை எதிர்க்கும் போராட்டக்களத்தில் ராகுல்காந்தி நின்று கொண்டிருக்கிறார் என்றார்.

டெல்லி போராட்டத்திற்கு ராகுல் காந்தி ஆதரவு தந்தது தொடர்பாக அமைச்சர் விஸ்வநாதன் பேசியதற்கு தி.மு.க. எம்.எல்ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து பேசிய அமைச்சர் விஸ்வநாதன் நீட் சமூக நீதிக்கு எதிரானது, வினாத்தாள கசிவுகள் மாணவர்களின் கனவுகளை கலைக்கிறது. நீட் தேர்வு முறையால் கல்வி மாபிஃயாக்கள் பயனடைகிறார்கள், ஏழை, கிராமப்புற மாணவர்கள் பெருமளவில் பாதிப்படைந்துள்ளனர். ஒரே ஒரு நுழைவுத்தேர்வு வழியாக மாணவர்களின் திறமையை தீர்மானிப்பது மிகப்பெரிய தவறு. நீட் தேர்வு முறை அறிமுகப்படுத்திய பின்பு மாணவர்களும், பெற்றோர்களும் மன உளைச்சலில் உள்ளனர். டிஜிட்டல் இந்தியா என மேடைக்கு மேடை முழங்கும் பாஜக அரசால் ஒரு தேர்வை கூட சிறப்பாக நடத்த முடியவில்லை என்றார்.

அமைச்சர் விஸ்வநாதன் பேச்சுக்கு குறுக்கிட்டு பேசிய எ.வ.வேலு, நீட் தேர்வை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்து பேசியவர் காங்கிரசை சேர்ந்த மூத்த அமைச்சர் குலாம் நபி ஆசாத் என்றார்.

இதனை தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தனித்தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தினார். இதில் பாஜகவை தவிர எஞ்சிய கட்சிகளின் முழுமையான ஆதரவுடன் நீட் தேர்வுக்கு எதிரான தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.