21ம் நூற்றாண்டு, சமூக வளர்ச்சி, கருத்தியல் சுதந்திரம் என இப்போது நாம் பேசுகிறோம். ஆனால் தற்போதும்கூட பெண்களை வெறும் உடமையாகவே பார்க்கும் ஒரு மனநிலை சமூகத்தின் பார்வையில் அப்படியேத்தான் இருக்கிறது.
ஒரு பெண்ணின் அறிவு அல்லது ஆளுமையை விட, அவரது உடல் தோற்றத்திற்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
இதனையும் தாண்டி ஒரு ஆணை திட்டவேண்டும் என்றால்கூட பெண்ணின் உறுப்புகளை குறிக்கும், அல்லது பெண்ணின் குணாதிசயத்தை குறிக்கும் வார்த்தைகளை பயன்படுத்தியே பேசுகிறார்கள்.
இந்தியாவில் தமிழ்நாடு ஒரு முற்போக்கு சிந்தனை கொண்ட மாநிலம் என்று பலரும் பெருமைப்பேசி வருகின்றனர். ஆனால் இங்கு அந்த முற்போக்கு சிந்தனை கொண்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், அரசியல் களத்தில் பெண்கள் குறித்து இழிவாக பேசுவது தொடர்கதையாகி வருகிறது.
குறிப்பாக திராவிட கட்சிகளின் உயர் பதவிகளில் இருக்கும் சிலர் அவ்வப்போது எதிர்க்கட்சிகளின் பெண் உறுப்பினர்களை இழிவாக பேசுவது என்பது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், திமுகவை விமர்சிக்க நடிகை நயன்தாரா பேரைப் பயன்படுத்தியுள்ளார்.
இன்று விழுப்புரத்தில் அவர் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றில்,
“அப்துல் கலாம் கனவுக் காண சொன்னார். இவர் (முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்) அதைவிட ஒருபடி மேலேச்சென்று உங்கள் கனவை சொல்லுங்கள் நான் நிறைவேற்றுகிறேன் எனச் சொல்கிறார். ஆமாம், எனக்கு நயன்தாரா வேண்டும். என் கனவை நிறைவேற்றுவாரா? கேட்பார்கள் எனக்கு நயன்தாராவை கல்யாணம் செய்து வைய்யுங்கள் என்று. இவர் நிறைவேற்றுவாரா?” எனப் பேசியிருந்தார்.
இவரின் இந்தப் பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தநிலையில் தற்போது இதற்கு மன்னிப்புக் கோரியுள்ளார் சி.வி. சண்முகம்.
அவரது பேச்சு தவறாக பயன்படுத்தப்பட்டதாகவும், எந்தவிதமான தவறான நோக்கத்துடனும் இப்படி கூறவில்லை என்றும், இதனால் ஏற்பட்ட தவறுக்கு மனமார்ந்த வருத்தம் தெரிவிப்பதாகவும் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.