தேசிய பேரிடர் மீட்பு படை உதவி ஆய்வாளர் பிரதீப் பட் தலைமையில் சிவசுப்பிரமணியம், ஜெயகுணம், மனோகரன் ஆகியோர் அடங்கிய மீட்பு படை குழுவினர் ஆழியாறு அணையில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர்.
கோவை மாவட்டத்தில் பி.ஏ.பி. திட்டத்தின்கீழ் அமைந்து உள்ள முக்கிய அணைகளில் ஆழியாறு அணை குறிப்பிடத்தக்கது. 120 அடி கொள்ளளவு உடைய இந்த அணை வடகிழக்கு பருவமழைக்காலத்தில் முழு கொள்ளளவை எட்டும்.
இதனால் அணையில் இருந்து பாதுகாப்பு கருதி 11 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்படும். அப்போது ஆழியாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கோபாலபுரம்-மீனாட்சிபுரம் தரைப்பாலம், காளியப்பகவுண்டன் புதூர் தரைப்பாலம் ஆகியவை நீரில் மூழ்கி அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படை உதவி ஆய்வாளர் பிரதீப் பட் தலைமையில் சிவசுப்பிரமணியம், ஜெயகுணம், மனோகரன் ஆகியோர் அடங்கிய மீட்பு படை குழுவினர் நேற்று மாலை ஆழியாறு அணையில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர்.
அப்போது உடன் இருந்த ஆனைமலை தாசில்தார் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் அபீப் ரஹ்மான், சிறப்பு உதவி ஆய்வாளர் ஆறுச்சாமி ஆகியோரிடம் வடகிழக்கு பருவமழைக்கால பேரிடர் முன்னெச்சரிக்கையாக அணைப்பகுதியில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர்.
அதன்பிறகு அணையில் நீர்இருப்பு, அதிகபட்ச வெள்ள அளவு, நீர்ப்பிடிப்பு பகுதிகள், நீர்வழித்தடங்கள், மதகுகளின் உறுதித்தன்மை, வெள்ளம் ஏற்படும்போது அணையில் மேற்கொள்ளப்படும் நீர்மேலாண்மை, ஆழியாற்றில் திறக்கப்படும் வெள்ளநீரால் ஆற்றங்கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் வெள்ளத்தில் பாதிக்கப்படுகிறதா என்பது குறித்து நீர்வளத்துறையினரிடம் கேட்டறியப்பட்டது.
தொடர்ந்து ஆழியாறு அணையில் உபரி நீர் வெளியேறும் பாதைகள் மற்றும் மதகுகளின் உறுதி தன்மை குறித்து கேட்டறிந்த தேசிய பேரிடர் மீட்புப்படையினர் அணை மதகுகள் இயக்கும் நிலையில் உள்ளனவா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.