2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூ.50 ஆயிரம் பணம், 46 கிராம் வெள்ளி கொலுசையும் பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம்- ராக்காச்சிபுரத்தை சேர்ந்தவர் சாகுல்அமீது (34). இவர் நத்தத்தில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரது குடும்பத்தினர் விடுமுறைக்காக வெளியூர் சென்று விட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சாகுல்அமீது சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்துவிட்டு கடைக்கு சென்று விட்டார். மீண்டும் இரவு வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கபட்டிருந்தது.
இதில் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த 2 பீரோக்கள் உடைக்கபட்டு இருந்தது. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து சாகுல்அமீது பீரோவில் இருந்து 5 பவுன் நகை, மற்றும் 4 லட்சம் பணம் திருடு போனதாக நத்தம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யபட்டு நத்தம் போலீஸ்- இன்ஸ்பெக்டர் பொன்குணசேகரன், தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் அபினேஷ், மலைச்சாமி, தலைமை காவலர்கள் கிருபாகரன், அழகுராஜா, கணேஷ் உள்ளிட்ட போலீசார்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து சி.சி.டி.வி காட்சிகளை வைத்து நத்தம் மதுரை சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பரளி பஸ்ஸ்டாப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் மதுரையை சேர்ந்த ரங்கராஜ் (21), விஜய் (28) என்பதும், நகை, பணம் திருடியது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூ.50 ஆயிரம் பணம், 46 கிராம் வெள்ளி கொலுசையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்கள் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் தாங்கள் திருடியது தங்க நகைகள் அல்ல என்றும், அடகு வைக்கும் போது அது கவரிங் நகைகள் என்று தெரிவிக்கபட்டதாகவும், இதனால் தாங்கள் ஏமாந்து போனதாகவும், பணம் 50 ஆயிரம், வெள்ளி கொலுசுகளை மட்டுமே தாங்கள் திருடியதாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.