கல்குவாரியை மூடும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர். நேற்று இரவிலும் பொதுமக்கள் சமையல் செய்து சாப்பிட்டு விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று 2-வது நாளாக அங்கு போராட்டம் நீடித்து வருகிறது. கிராம மக்களின் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள வடக்கு பாப்பான்குளத்தில் புதியதாக தனியார் கல்குவாரி அமைப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு அப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கல்குவாரி அமைக்கப்பட்டால் அங்கு வெடி வைத்து பாறைகளை உடைப்பதினால் ஏற்படும் அதிர்வுகளால் அருகில் உள்ள கிராமங்களில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டு, வீடுகள் சேதமடையும் என்றும் புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும் பாப்பான்குளம் கிராமத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் தான் கூந்தன் குளம் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு வாழும் வெளிநாட்டு பறவைகளுக்காக அந்த ஊர் மக்கள் கோவில் கொடை விழாக்களிலும், வீட்டு சுப நிகழ்ச்சிகளிலும் வெடிகள் போடுவதில்லை.
இந்நிலையில் கல்குவாரியால் வெளிநாட்டு பறவைகளுக்கும் ஆபத்து ஏற்படுவதுடன், பறவைகள் சரணாலயமும் அழியும் நிலை உருவாகும் என்றும் அச்சப்படுகின்றனர். அத்துடன் விளை நிலங்கள் நாசமாகும். குவாரி அமைப்பதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவிடும். எனவே குவாரி அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனை வலியுறுத்தி நேற்று கல்குவாரி முன் திரண்டு, கைகளில் கருப்பு கொடி ஏந்தி கொளுத்தும் வெயிலில் போராட்டம் நடத்தினர். இதில் மாணவ-மாணவிகளும் பங்கேற்றுள்ளனர். அவர்கள் கல்குவாரியை மூட கோரி முழக்கங்கள் எழுப்பினர். போலீசாரும், வருவாய்துறையினரும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை என்ற பெயரில் மிரட்டுவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். கல்குவாரியை மூடும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர். நேற்று இரவிலும் பொதுமக்கள் சமையல் செய்து சாப்பிட்டு விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று 2-வது நாளாக அங்கு போராட்டம் நீடித்து வருகிறது. கிராம மக்களின் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.