திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சப்-டிவிசனுக்கு உட்பட்ட வெப்படை, பள்ளிபாளையம், திருச்செங்கோடு புறநகர் காவல் நிலையம் ஆகிய பகுதிகளில் கடந்த 2 மாதங்களில் தனியாக நடந்து சென்ற பெண்களிடம் சுமார் 14 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரோஜ்குமார் தாகூர் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செல்லபாண்டியன் தலைமையில் திருச்செங்கோடு உட்கோட்ட பொறுப்பு டி.எஸ்.பி. பழனிச்சாமி, இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சதீஷ்குமார், வெற்றிவேல், போலீசார் சரவணகுமார், சரவணன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடிவந்த சூழ்நிலையில் திருச்செங்கோட்டில் இருந்து பள்ளிபாளையம் செல்லும் வழியில் எஸ்பிபி கீழ் காலனி பாலம் அருகில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே வந்த 2 பேரை மடக்கி விசாரித்தபோது அவர்கள் செயின் பறிப்பு வழக்குகளில் சம்பந்தமுடைய குற்றவாளிகள் என்று தெரிய வந்தது. அவர்களை தீவிர விசாரணைக்கு உட்படுத்தியதில் 2 பேரும் கடந்த இரண்டு மாதங்களாக திருடிய 14 சவரன் நகைகள் மீட்கப்பட்டன.
விசாரணையில் அவர்கள் தேவனாங்குறிச்சியை சேர்ந்த டேவிட் என்கின்ற ராஜு(24) அதே பகுதியை சேர்ந்த அருண் (23) என்பதும், திருச்செங்கோடு நகர பகுதியில் டீக்கடை அமைப்பதற்காக அவர்கள் திருட்டில் ஈடுபட்டது, இருவரும் பொறியியல் பட்டதாரிகள் என்பதும் தெரியவந்தது.
இருவரும் இணைந்து திருச்செங்கோடு பகுதியில் பெரிய அளவிலான டீக்கடை வைப்பதற்காக குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் திருச்செங்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிரையில் அடைத்தனர்.