முட்டை 
தமிழக செய்திகள்

நாமக்கல் மண்டலத்தில் ஒரே வாரத்தில் முட்டை விலை 50 காசுகள் உயர்வு

முட்டை விலை தொடர் உயர்வால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாமக்கல் மண்டலத்தில் தினசரி 7 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் தமிழக சத்துணவு திட்டத்திற்கும் வெளி மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இது தவிர இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை நாமக்கல்லில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

விலை உயர்வு

இந்த நிலையில் நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் முட்டையின் தேவை மற்றும் உற்பத்தி குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து முட்டை உற்பத்தி சரிந்து வருவதாலும், டீசல் விலை உயர்வாலும் முட்டை விலையை மேலும் 10 காசுகள் உயர்த்த முடிவு ெசய்யப்பட்டது.

அதன் ெதாடர்ச்சியாக நேற்று 620 காசுகளாக இருந்த முட்டை பண்ணை கொள்முதல் விலை இன்று காலை முதல் 630 காசுகளாக உயர்ந்து அமலுக்கு வந்துள்ளது. இதனால் கடந்த 8-ந் தேதி 580 காசுகளாக இருந்த முட்டை விலை ஒரே வாரத்தில் 50 காசுகள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உற்பத்தி சரிவு காரணம்

முட்டையின் உற்பத்தியும் கடந்த சில நாட்களாக 15 சதவீதம் குறைந்துள்ளதாலும், டீசல் விலை மற்றும் கோழி தீவனங்கள் விலை உயர்ந்துள்ளதாலும் முட்டை விலை ெதாடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு 640 காசுகள் அதிக பட்சமாக இருந்த நிலையில் நடப்பாண்டில் 7 ரூபாய் வரை ஒரு முட்டை விலை உயர வாய்ப்புள்ளதாகவும் கோழி பண்ணையாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

முட்டை விலை தொடர் உயர்வால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேலம், நாமக்கல் மாவட்ட சில்லரை விற்பனை கடைகளில் ஒரு முட்டை விலை 7 ரூபாயை தாண்டி உள்ளது. இதனால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கறிக்கோழி

நாமக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தினசரி 30-லட்சத்திற்கும் அதிகமான கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது. நாமக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கடந்த சில நாட்களாக 120 ரூபாயாக நீடிக்கிறது. முட்டை கோழி விலை கடந்த 11-ந் தேதி முதல் 120 ரூபாயாக நீடிக்கிறது.