நாமக்கல்:
தமிழகத்தில் பல்லடம், நாமக்கல்,ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில், 25 ஆயிரம் கறிக் கோழி உற்பத்தி பண்ணைகள் மூலம் தினமும், 30 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்திசெய்யப்பட்டு, தமிழகம், ஆந்திரா,கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. பண்ணை கொள்முதல் விலையை, பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு (பி.சி.சி.,) தினமும் நிர்ணயம் செய்கிறது.
டிசம்பர் மாதம் 1-ந்தேதி கொள்முதல் விலை, 93 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது. அதையடுத்து, படிப்படியாக உயர்ந்து, 6-ந் தேதி 102-க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து, 24-ந்தேதி 82 க்கும், 26-ந்தேதி 96 என குறைந்தது. நேற்று 12 ரூபாய் குறைக்கப் பட்டு கொள்முதல் விலை 84 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது. ஒரே நாளில் 12 ரூபாய் சரிந்துள்ளது பண்ணையாளர்களை கவலை அடைய செய்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறுகையில், கறிக்கோழி கொள்முதல் நிர்ணயம் செய்யும் விலையில்இருந்து,விற்பனையாளர்கள், 15 ரூபாய் குறைத்து கொள்முதல் செய்கின்றனர்.
அதனால், பண்ணையாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. தற்போது சீதோஷ்ணம் மாற்றம் காரணமாக, கோழிகளின் எடை அதிகரித்து உற்பத்தியும் உயர்ந்துள்ளது.
அதன் படி தினமும், 30 லட்சம் கிலோ என்று இருந்த நிலையில், தற்போது, 35 லட்சம் கிலோவாக அதிகரித்துள்ளது.உற்பத்தி செலவை காட்டிலும் கிலோவுக்கு 20 ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது.
அதன் மூலம் வாரம், 150 கோடி ரூபாய் பண்ணையாளர்களுக்கு இழப்பு ஏற்படுகிறது என்றார்.