தமிழக செய்திகள்

மாணவர்கள் நலனில் என்றுமே சமரசம் கிடையாது!- நயினார் நாகேந்திரன்

இளைஞர் நலன் மற்றும் எதிர்காலத்தைவிட முக்கியமானது எதுவும் இல்லை.

நீட் போராட்டம்

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இவர்களது போராட்டம் நேற்று 33-வது நாளை எட்டியது. இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.

கடந்த 20-ந் தேதி இந்த போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் நோக்கி நடத்திய பேரணி பெரிய வன்முறையில் முடிந்தது. இந்த விவகாரத்தை முன்னெடுத்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரசார் நடத்திய போராட்டம் பா.ஜ.க.வுக்கு பெரிய சவாலாக அமைந்தது.

போலீஸ் தடியடியில் பல இளைஞர்கள் காயம் அடைந்த பிறகும் ஜந்தர் மந்தரில் இன்னும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரதமர் மோடி

டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டார்.

அந்த பதவில் அவர்,

* இளைஞர் நலன் மற்றும் எதிர்காலத்தைவிட முக்கியமானது எதுவும் இல்லை.

* மாணவர்களின் நலனை பாதுகாக்க தொடர் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் விரைவு நீதிமன்றம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

* தேர்வுத்தாள் கசிவில் தொடர்புடையோருக்கு கடும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும்.

* வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேவையான அனைத்து நடவடிக்கை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

* வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றமிழைத்த அனைவரும் தண்டிக்கப்படுவர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நயினார் நாகேந்திரன்

பிரதமர் மோடியின் இந்த பதிவை குறிப்பிட்டு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

மாணவர்கள் நலனில் என்றுமே சமரசம் கிடையாது!

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தொடர்புடையவர்களில் ஒருவர் கூட, சட்டத்தின் பார்வையில் இருந்து தப்ப முடியாது என நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உறுதியளித்துவிட்டார்.

எதிர்காலத்தில் இதுபோன்ற குளறுபடிகளைத் தடுக்க, அடுத்த ஆண்டு முதல் நடைபெறும் தேர்வுகள் அனைத்தும், முழுக்க முழுக்க “Computer-Based Test” முறையில் நடக்கும் என நமது மாண்புமிகு மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஆனால், கரப்பான் பூச்சி கூட்டத்துடன் இணைந்து இந்த விவகாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கலவரமாக்க முயல்வது கடும் கண்டனத்திற்குரியது. தேசப் பாதுகாப்பிற்கு ஆபத்தானது.

எனவே, தங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக, தேசத்தின் இளைஞர் சக்தியை தவறான வழியில் காங்கிரஸ் கட்சி வழிநடத்தக் கூடாது!

இளைஞர்களுக்கான வளமான எதிர்காலத்தை உருவாக்க, அரசியல் நிலைப்பாடுகளை தாண்டி அனைத்து அரசியல் கட்சிகளும் மத்திய அரசுடன் கைகோர்த்து செயல்பட வேண்டும்!

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.