தமிழக செய்திகள்

விளையாட்டை வாழ்வின் ஒரு பகுதியாக்கி வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்! - நயினார் நாகேந்திரன்

விளையாட்டு என்பது வெற்றிக்கான பாதை மட்டுமல்ல; ஒழுக்கம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை மற்றும் குழு உணர்வை வளர்க்கும் சிறந்த களம்.

தேசிய விளையாட்டு தினம்

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29-ந்தேதி தேசிய விளையாட்டு தினம் (National Sports Day) கொண்டாடப்படுகிறது.

மேஜர் தியான் சந்த்

இந்தியாவின் ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தியான் சந்த் அவர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.

மேஜர் தியான் சந்த் தலைமையிலான இந்திய ஹாக்கி அணி, 1928, 1932 மற்றும் 1936 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து மூன்று முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்தது.

இந்தியாவில் விளையாட்டுத் துறையை ஊக்குவிப்பதற்கும், ஆரோக்கியமான உடல் உறுதியைப் பேணுவதற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்திய அரசால் கடந்த 2012-ம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாக தேசிய விளையாட்டு தினம் அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

துரோணாச்சார்யா விருது

இந்தியக் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் அல்லது சிறப்பு விழாக்களில், விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைக்கும் தலைசிறந்த வீரர்களுக்கு மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது, மற்றும் துரோணாச்சார்யா விருது போன்ற உயரிய விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறார்கள்.

விளையாட்டு என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது நம் வாழ்வில் ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் உடல்நலத்தை வளர்க்கும் ஒரு அத்தியாவசியக் கலை என்பதை மக்களுக்கு நினைவூட்டுவதே இந்நாட்டின் முக்கிய நோக்கமாகும்.

பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியை ஒரு வாழ்வியலாக மாற்றும் நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் மாரத்தான் போட்டிகள் நாடு முழுவதும் நடத்தப்படுகின்றன.

நயினார் நாகேந்திரன்

இந்நிலையில் தேசிய விளையாட்டு தினத்தையொட்டி பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்

அனைவருக்கும் தேசிய விளையாட்டு தின நல்வாழ்த்துகள்!

விளையாட்டு என்பது வெற்றிக்கான பாதை மட்டுமல்ல; ஒழுக்கம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை மற்றும் குழு உணர்வை வளர்க்கும் சிறந்த களம்.

பாரத இளைஞர்கள் அனைவரும் விளையாட்டில் ஆர்வம் கொண்டு, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பேணி, தங்கள் திறமைகளை உலக அரங்கில் வெளிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு வெற்றியின் பின்னாலும் இருக்கும் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் போற்றுவோம்.

விளையாட்டை வாழ்வின் ஒரு பகுதியாக்கி, ஆரோக்கியமான மற்றும் வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.