சென்னை பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் மையக்குழு கூட்டம் நடந்தது. 
தமிழக செய்திகள்

முதலமைச்சர் விஜய்யை நான் கவுரவித்ததை கொச்சைப்படுத்த வேண்டாம்- நயினார் நாகேந்திரன்

அரசு விழாவில் யாரை எங்கே அமரவைக்க வேண்டும் என்பது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் முடிவு. இது நாட்டிற்கு முக்கிய பிரச்சனை இல்லை.

தமிழக பா.ஜ.க. மையக் குழு கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. முதலமைச்சர் விஜய்யை மரியாதை செய்யும் வகையில் சால்வை அணிவித்ததை விமர்சிக்க வேண்டாம் என நயினார் நாகேந்திரன் கூறினார். மின்வெட்டு உள்ளிட்ட பிரச்சனைகளை அரசு முதலில் தீர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

தமிழக பா.ஜ.க. மையக் குழு கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் இன்று நடந்தது.

கூட்டத்தில் முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், மா.வெங்கடேசன், சக்கரவர்த்தி, கராத்தே தியாகராஜன், நரேந்திரன், போஜராஜன் எம்.எல்.ஏ., வி.பி.துரைசாமி, கே.டி.ராகவன், சதீஷ்குமார், ஆனந்த பிரியா, கார்த்தி யாயினி உள்பட 15 பேர் கலந்து கொண்டனர்.

பாராட்டு

இந்த கூட்டத்தில் ரூ.13 ஆயிரம் கோடி நலத்திட்ட உதவிகளை தமிழகத்திற்கு வழங்கிய பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் திருவள்ளுவரின் திருக்குறளை உலக நாடுகள் முழுவதும் பரப்பி வருவதோடு ரஷிய மொழியில் மொழி பெயர்த்து ரஷிய அதிபருக்கு வழங்கியதற்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் மோடி தமிழர்களின் பண்பாடு, தமிழ் கலாச்சாரம் ஆகியவற்றை ஐ.நா.மன்றம் முதல் உலக நாடுகள் முழுவதிலும் எடுத்து பேசி வருகிறார். பிரிக்ஸ் மாநாட்டில் ரஷிய மொழியில் மொழி பெயர்த்து அந்த நாட்டு அதிபருக்கு வழங்கினார். பெண்கள், குழந்தைகள், விவசாயிகள், இளம் தொழில் முனைவோர் என்று அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். 25 ஆண்டுகளாக ஓய்வு எடுக்காமல் நாட்டுக்காக உழைத்து வருகிறார். அவரை பாராட்டி தீர்மானம் போட்டிருக்கிறோம்.

நேற்றைய அரசு விழாவில் நான் பங்கேற்றது குறித்து முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனங்களுக்கு நான் கருத்து சொல்ல முடியாது. ஆனால் இதற்கு முன்பும் எத்தனையோ நிகழ்வுகள் இதேமாதிரி நடந்திருக்கிறது. அதைப் பற்றியெல்லாம் இப்போது சொல்ல விரும்பவில்லை. சொன்னால் அது மேலும் விமர்சனங்களை உருவாக்கும்.

அரசு விழாவில் யாரை எங்கே அமரவைக்க வேண்டும் என்பது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் முடிவு. இது நாட்டிற்கு முக்கிய பிரச்சனை இல்லை. தமிழகத்தில் மின்வெட்டு உள்ளிட்ட ஏராளமான பிரச்சனைகள் உள்ளது. இதே நிலையில் சென்றால் தமிழ்நாடே கட்டாகி விடும். மின்வெட்டு பிரச்சனையை அமைச்சர் நிர்மல்குமார் முதலில் சரி செய்யட்டும்.

கொச்சைப்படுத்த வேண்டாம்

முதலமைச்சர் விஜய் நான் உள்பட எல்லோருக்கும் முதலமைச்சர். எனவே தான் அவருக்கு மரியாதை செய்ய நானும் அவரை சால்வை அணிவித்து கவுரவித்தேன். அதை கொச்சைப்படுத்துவதை நான் கண்டிக்கிறேன். முதலமைச்சர் எப்படி தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராக இருக்கிறாரோ அதேபோல் இந்தியாவின் பிரதமர் மோடி வந்தபோது அவரை அவர் வரவேற்றதும், வழியனுப்பியதும் தவறில்லை.

பிரதமர் மோடி முதலமைச்சர் விஜய்யின் கையை பிடித்து ரெயில் தொடக்க விழாவில் கொடியசைக்க வைத்ததை எல்லோரும் பார்த்தோம். எந்த அளவுக்கு அவர் இணக்கமான போக்கை கடைபிடிக்கிறார் என்பது தெரியும்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. தேர்தல் அறிக்கையில் சொன்னதை த.வெ.க. அரசு நிறைவேற்றவில்லை. டாஸ்மாக் விவகாரத்தில் 11 நிறுவனங்களிடம் இருந்து மதுபானங்கள் வாங்குவதை தடை செய்தார்கள். மீண்டும் அதே நிறுவனத்துக்கு கொடுக்கவும் செய்தார்கள். இதில் யார் குளறுபடி செய்தது? என்பதை அவர்கள்தான் விளக்க வேண்டும்.

திருவள்ளுவரை பொறுத்தவரை அவர் ஒரு தெய்வப் புலவர். 63 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவருக்கு என்ன உடை உடுத்தி பார்க்க வேண்டும் என்பது அவரவர் விருப்பத்தை பொறுத்தது.

இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறிய தி.மு.க.வை இப்போது மீண்டும் காங்கிரஸ் அழைப்பதாக கூறுகிறீர்கள். அந்த கூட்டணியில் இருந்து வெளியே வந்த காங்கிரஸ் மீண்டும் உள்ளே போக நினைக்கிறது.

முன்பு செவிலியர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசினார். போராடினார். அவரே இப்போது செவிலியர்களை கைதும் செய்கிறார். மின் தடை தமிழகம் முழுவதும் அதிக அளவில் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT