அன்வர்தீன்- நயினார் நாகேந்திரன்
தமிழக செய்திகள்

காவல்நிலையம், சிறையில் குற்றவாளிகள் அதிகாரிகளால் அடித்துக் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது: நயினார் நாகேந்திரன்

100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட 65 வயது வழக்கறிஞர் சிறையில் உயிரிழந்தார்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

பழனி நிலமோசடி வழக்கில் தொடரும் மர்மங்கள்!

பழனியில் ₹100 கோடி மதிப்பிலான நிலம் மோசடி செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அன்வர்தீன் என்பவர் நெஞ்சுவலியின் காரணமாக திடீரென உயிரிழந்துவிட்டதாகவும், சார்பதிவாளர் மணிகண்டன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியையும் பல்வேறு சந்தேகங்களையும் எழுகின்றன.

முழு மருத்துவப் பரிசோதனைக்கு பின்னரே குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படும் பட்சத்தில், தவெக அரசின் மிகப்பெரும் ஊழலை அம்பலப்படுத்திய இவ்வழக்கின் குற்றவாளிக்கு மட்டும் எப்படி திடீரென நெஞ்சுவலி வரும்? அதிலும் இவ்வழக்கின் முக்கிய சாட்சியங்களாக கருதப்படும் இருவருக்கும் ஒரே நேரத்தில் எப்படி உடல்நலக்குறைவு ஏற்படும்?

த.வெ.க. தலைவர் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்றதில் இருந்து, காவல் நிலையங்களிலும் சிறைகளிலும் இருக்கும் குற்றவாளிகள் எல்லாம் அதிகாரிகளால் அடித்துக் கொல்லப்படுவது அதிகரித்து வரும் நிலையில், இந்த மரணத்தை இயற்கையான நிகழ்வு என்று கடந்து போக முடியவில்லை.

எனவே, அன்வர்தீன் உயிரிழந்தபோது பணியில் இருந்த அனைத்து சிறைக்காவல் அதிகாரிகளையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர வேண்டும். இம்மரணத்தின் உண்மையான பின்னணி குறித்த முறையான விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சார்பதிவாளர் மணிகண்டனுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கி, அவரை அரசு பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மோசடி வழக்கு கடந்து வந்த பாதை

பழனி கோவில் அடிவாரம் பகுதியில் தண்டபாணி சுவாமிகள் மடத்தின் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் உள்ளது. இந்த நிலம் கடந்த மாதம் 6-ந்தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில், தனி நபர்களுக்கு ரூ.2 கோடிக்கு கிரையமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த மோசடி தொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் நிலத்தை விற்பனை செய்த விழுப்புரத்தைச் சேர்ந்த ஆசிரியர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை (60), சேதுபதி (67) அவர்களுக்கு உதவிய பழனி கவுண்டன்குளம் பகுதியை சேர்ந்த வக்கீல் அன்வர்தீன் (65) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து கடந்த 3 நாட்களாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன்

அதேநேரம் இந்த வழக்கில் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் நெஞ்சுவலி காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இதனால் அவரை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்த முடியவில்லை. இதையடுத்து மாஜிஸ்திரேட் பாக்கியராஜ் அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் வந்து ஜஸ்டின் மணிகண்டனிடம் விசாரணை நடத்தினார். பின்னர் அவரை வருகிற 21-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுச்சென்றார்.

திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஜஸ்டின் மணிகண்டனுக்கு 2 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட இருக்கிறது. அதன் பிறகு அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டால் மதுரை சிறைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே ஆசிரியர் முருகதாஸ், சேதுபதி, அன்வர்தீன் ஆகியோர் தரப்பில் ஜாமீன் கேட்டு திண்டுக்கல் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுக்களை தள்ளுபடி செய்து நேற்று கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து மாலையில் ஆசிரியர் முருகதாஸ் உள்பட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 12-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் பாக்கியராஜ் உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அன்வர்தீன் உயிரிழப்பு

இந்நிலையில், பழனி கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கில் கைதான வழக்கறிஞர் அன்வர்தீன் சிறையில் உயிரிழந்துள்ளார். சர்க்கரை நோய், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீனுக்கு சிறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்றும் இதுகுறித்து விசாரித்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.