தமிழக செய்திகள்

ஆட்சி மட்டும் தான் மாறியுள்ளதே தவிர காட்சியும் மாறவில்லை, மக்களின் கவலைகளும் தீரவில்லை- நயினார் நாகேந்திரன்

முந்தைய ஆட்சியில் அணில்களால் மின்வெட்டு ஏற்படுகிறது என்று கதை கட்டினார்கள், தற்போதைய தவெக ஆட்சியில் மின் உபகரணங்கள் திருட்டால் மின்வெட்டு உண்டாகிறது என்று காதில் பூ சுற்றுகிறார்கள்.

சென்னை:

தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

அம்பத்தூர், பெரம்பூர், அரும்பாக்கம், மாங்காடு, மேடவாக்கம் உள்ளிட்ட சென்னையின் பெரும்பாலான முக்கியப் பகுதிகளில் நேற்றிரவு முழுவதும் பலமணி நேரம் நீடித்த தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளது முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் நிர்வாகத் தோல்விக்கான சான்று.

"ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம்" என்று வாக்குறுதியளித்த தவெகவின் பொய்களை நம்பி வாக்களித்த மக்கள், கோடை வெப்பம் பொறுக்க முடியாமல் குழந்தை குட்டிகளுடன் இன்று நடுத்தெருவில் இறங்கி மின்சாரத்திற்காக போராடுவது மிகுந்த வேதனையளிக்கிறது. முந்தைய ஆட்சியில் அணில்களால் மின்வெட்டு ஏற்படுகிறது என்று கதை கட்டினார்கள், தற்போதைய தவெக ஆட்சியில் மின் உபகரணங்கள் திருட்டால் மின்வெட்டு உண்டாகிறது என்று காதில் பூ சுற்றுகிறார்கள். மொத்தத்தில் ஆட்சி மட்டும் தான் மாறியுள்ளதே தவிர காட்சியும் மாறவில்லை, மக்களின் கவலைகளும் தீரவில்லை.

தனது சொந்தத் துறை இப்படி இருளில் மூழ்கிக் கிடப்பதை கவனிக்காமல், திருப்பரக்குன்றத் தீபத்தூணை ஒளிர விட மாட்டோம் என முட்டி மோதிக் கொண்டிருக்கும் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் போன்றோருக்கு அடிப்படை அரசுப் பதவி வகிக்கக் கூடத் தகுதியில்லை என்று கூறியுள்ளார்.