தமிழக செய்திகள்

நாகர்கோவில் வியாபாரி வீட்டில் 22 பவுன் நகைகள்-ரூ.12 லட்சம் கொள்ளை

போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு, பட்டப்பகலில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருப்பது அந்தப் பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாகர்கோவில் கோட்டார் சிதம்பரம் நகர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 45). இவர் கோட்டாரில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கலா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கடை

தினேஷ் காலையில் மளிகை கடைக்கு சென்றுவிடும் நிலையில், குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற பிறகு கலாவும் மளிகை கடைக்குச் செல்வார். பின்னர் மதியம் சாப்பிடத் தான் வீட்டுக்குச் செல்வார்களாம்.

நேற்று காலை தினேஷ் வழக்கம் போல் கடைக்குச் சென்றார். கலா தனது மூத்த மகனுடன் தாயார் வீட்டுக்கு சென்று விட்டு கடைக்கு வந்து விட்டார்.

கொள்ளை

இந்த நிலையில் மதியம் சாப்பாட்டுக்காக தினேஷ் வீட்டுக்குச் சென்றார். அப்போது, வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தினேஷ் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது அங்கு பீரோ திறந்து கிடக்க, அதில் உள்ள பொருட்கள், துணிகள் சிதறி கிடந்தன. இதனால் வீட்டுக்குள் கொள்ளையர்கள் புகுந்திருப்பதை அறிந்த தினேஷ், கோட்டார் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர்.

போலீசார்

அப்போது பீரோவில் இருந்த 22 பவுன் நகை மற்றும் ரூ.12 லட்சம் கொள்ளை போயிருப்பதாக தினேஷ் தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். மேலும் கொள்ளை நடந்த வீட்டிற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டின் கதவு மற்றும் பீரோவில் பதிவாகியிருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன.​வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு, பட்டப்பகலில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருப்பது அந்தப் பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT