சபரிவர்மன்  
தமிழக செய்திகள்

உடற்கூராய்வில் உறுதியான 19 காயங்கள்.. சிறையில் நாகர்கோவில் மாற்றுத்திறனாளி இளைஞர் மரணம் - 3 வார்டன்கள் கைது

சபரிவர்மன் எனும் சாமானியருக்கு ஒரு சட்டம், த.வெ.க நிர்வாகி என்றால் வேறொரு சட்டம்

நாகர்கோவில் சிறையில் விசாரணைக் கைதி சபரிவர்மன் உயிரிழந்த விவகாரத்தில் வார்டன் உள்பட 3 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கஸ்டடி மரணம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரான சபரிவர்மன், கடையில் குட்கா விற்றதாக கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற காவலில் மரணமடைந்துள்ளார்.

கைதானபோது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த சபரிவர்மன், விசாரணை முடிந்து சிறையில் அடைக்கப்பட்ட போது, உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார் என்று காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது.

குற்றச்சாட்டு

ஆனால், மரணமடைந்த சபரிவர்மனின் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும், அவரை மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் காவல்துறையினர் அடித்தே கொலை செய்துள்ளதாகவும் சபரிவர்மனின் குடும்பத்தார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கைது

மாவட்ட நீதிபதி முனிடையில் நேற்று நடத்தப்பட்ட உடற்கூராய்வில் சபரிவர்மன் உடலில் 19 காயங்கள் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட சிறை தலைமை வார்டன் ஜெகன், சிவகுமார், திருவிடைநம்பி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கவுள்ளனர்.

விமர்சனம்

இந்த கஸ்டடி மரணத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தவெக அரசு மீதும் முதல்வர் விஜய்யின் இலாகாவான போலீஸ் துறை மீதும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து உரிய நீதி வழங்கப்பட வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அவரது எக்ஸ் பதிவில், "காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் இதற்கு உரிய பதில் சொல்ல வேண்டும்.

சபரிவர்மனின் கடையில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டதாக, அவரை கைது செய்த காவல்துறையினர், ஈரோட்டில் குட்கா விற்றதாக கைது செய்யப்பட்ட த.வெ.க. நிர்வாகி அருணை அன்றே சொந்த ஜாமினில் விடுவித்துள்ளனர்.

சபரிவர்மன் எனும் சாமானியருக்கு ஒரு சட்டம், த.வெ.க நிர்வாகி என்றால் வேறொரு சட்டம் என்னும் காவல்துறையின் போக்குக் கண்டிக்கத்தக்கது.

இந்தச்சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு, சபரிவர்மனின் மரணத்திற்குக் காரணமானவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும்.

சபரிவர்மனின் மரணத்துக்கு நீதி கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும்." என குறிப்பிட்டுள்ளார்.