தமிழக செய்திகள்

வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள முரசு - 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

நாளை நள்ளிரவு முதல் நவ.3ம் தேதி அதிகாலை வரையிலான, இடைப்பட்ட நேரத்தில் புயல் கரையை கடக்க உள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள முரசு புயல் காரணமாக ஒன்பது துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி ஆகிய 5 துறைமுகங்களிலும் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, நாகப்பட்டினம் ஆகிய துறைமுகங்களில் 2ம் எண் புயல் கூண்டும் ஏற்றப்பட்டுள்ளன.

ராமேஸ்வரம் மற்றும் குளச்சல் துறைமுகங்களுக்கு தகவல் மட்டும் பகிரப்பட்டுள்ளது.

முரசு புயல்

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 23 கி.மீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, தீவிரமடைந்து 'முரசு' எனும் சூறாவளியாக மாறியுள்ளது.

காலை 11.30 நேரப்படி, இது சென்னைக்கு கிழக்கே-தென்கிழக்கே சுமார் 560 கி.மீ தொலைவிலும், விசாகப்பட்டினத்திற்கு தெற்கே-தென்கிழக்கே 660 கி.மீ தொலைவிலும், நெல்லூருக்கு கிழக்கே-தென்கிழக்கே 630 கி.மீ தொலைவிலும், மசூலிப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 640 கி.மீ தொலைவிலும், ஓங்கோலுக்கு கிழக்கே-தென்கிழக்கே 680 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை காலை மத்திய-மேற்கு வங்கக் கடலில் 'தீவிர சூறாவளி புயலாக' வலுவடையக்கூடும்.

எப்போது கரையை கடக்கும்?

அதன் பிறகு, இது வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 2-ஆம் தேதி நள்ளிரவு (இந்திய நேரப்படி இரவு 11:30 மணி) முதல் நவம்பர் 3-ஆம் தேதி அதிகாலை (இந்திய நேரப்படி அதிகாலை 04:00 மணி) வரையிலான இடைப்பட்ட நேரத்தில், நெல்லூர் மற்றும் நர்சாபூருக்கு இடையே கரையை கடக்கக்கூடும்.

கரையைக்கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கி.மீ வேகத்திலும், சில நேரங்களில் 120 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

SCROLL FOR NEXT