தமிழக செய்திகள்

சோழிங்கநல்லூர் அருகே சதுப்பு நிலத்தில் கவிழ்ந்த மாநகர பேருந்து- 6 பேர் படுகாயம்

பேருந்தில் சுமார் 20 பேர் பயணம் செய்தனர்.

சோழிங்கநல்லூர்-மேடவாக்கம் சாலையில் லாரிக்கு வழிவிட இடது புறம் திருப்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மாநகர பஸ், சதுப்பு நிலத்தில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர்.

மாநகர பேருந்து

சென்னை அடையாறில் இருந்து மேற்கு தாம்பரம் நோக்கி நேற்று பகல் சுமார் 1.30 மணியளவில் மாநகர பஸ்(தடம் எண் 99) சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் சாமிதாஸ்(வயது 50) ஓட்டினார். கண்டக்டராக ராமச்சந்திரன் பணியில் இருந்தார். பஸ்சில் சுமார் 20 பேர் பயணம் செய்தனர்.

பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் வழியாக வந்த பஸ், பின்னர் சோழிங்கநல்லூரில் இருந்து பெரும்பாக்கம் வழியாக மேடவாக்கம் செல்லும் செம்மொழி பூங்கா சாலையில் சென்று கொண்டிருந்தது.

பெரும்பாக்கம்-சோழிங்கநல்லூர் சாலையில் மெட்ரோ ரெயில் கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. மேலும், சதுப்பு நிலத்தில் இருந்து மழைநீர் செல்ல சாலையின் நடுவே தரைப்பாலம் அமைக்கும் பணியும் நடைபெறுகிறது. இதனால் சாலையின் ஒரு பகுதியில் வாகனங்கள் ஒருவழி பாதையாக சென்று வருகின்றன.

சதுப்பு நிலத்தில் கவிழ்ந்தது

அப்போது, எதிரே லாரி ஒன்று வந்தது. அந்த லாரிக்கு வழிவிடுவதற்காக டிரைவர் சாமிதாஸ், பஸ்சை இடதுபுறமாக திருப்பினார். இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையின் இடதுபுறம் உள்ள சதுப்பு நிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் இருந்த பயணிகள் பயத்தில் அலறினர்.

உடனடியாக அந்த சாலையில் சென்றவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களின் உதவியுடன் பஸ்சில் இருந்த சுமார் 20 பயணிகள் மற்றும் டிரைவர், கண்டக்டரை மீட்டனர்.

6 பேர் காயம்

இந்த விபத்தில் டிரைவர் சாமிதாஸ் காயம் அடைந்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், லேசான காயம் அடைந்த 2 பெண்கள் உள்பட 5 பேர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கண்டக்டர் மற்றும் இதர 15 பயணிகள் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினர்.

விபத்து காரணமாக அந்த சாலையின் இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. பள்ளிக்கரணை போலீஸ் துணை கமிஷனர் பிரபாகரன், உதவி கமிஷனர்கள் வெங்கடேசன், சரவணன், பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ் பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

மாநகர போக்குவரத்து அதிகாரிகள், பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார், செம்மஞ்சேரி போலீசார் ஆகியோர் 2 ராட்சத கிரேன்களை வரவழைத்து சதுப்பு நிலத்தில் கவிழ்ந்த மாநகர பஸ்சை மீட்டனர். இதில் பஸ்சின் முன்புற கண்ணாடி நொறுங்கியதுடன், முன்பகுதி சேதமடைந்தது.

இதையடுத்து சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது. இந்த சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.