தமிழக செய்திகள்

தவெக தலைவர் விஜய் உச்சநீதிமன்றத்தை அணுகலாம் - முன்னாள் தலைமை வழக்கறிஞர்

தேர்தல் முடிவுகள் வெளியான முதல் நாளிலேயே கவர்னர் விஜய்யை அழைத்து ஆட்சி அமைக்க சொல்லியிருக்க வேண்டும்.

மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது,

என்னைப் பொறுத்தவரை தேர்தல் முடிவுகள் வெளியான முதல் நாளிலேயே கவர்னர் விஜய்யை அழைத்து ஆட்சி அமைக்க சொல்லியிருக்க வேண்டும்.

அரசியலமைப்பு சட்டத்தின்படி, தேர்தலில் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்த கட்சியின் தலைவரைத்தான் கவர்னர் முதலில் அழைக்க வேண்டும் என்பது நிலைநாட்டப்பட்ட விதிமுறை. அவருக்கு ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்கள் கால அவகாசம் கொடுத்து, தனது ஆதரவைத் திரட்டி ஒரு நிலையான ஆட்சியை அமைக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இதுதான் காலம் காலமாகப் பின்பற்றப்படும் நடைமுறை.

இப்போது உள்ள சிக்கல் என்னவென்றால், 118 பேர் ஆதரவு வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதன் மூலம் கவர்னரே ஒரு நெருக்கடியை உருவாக்குகிறார். சட்டமன்றம் செய்ய வேண்டிய வேலையை அவர் கையில் எடுக்கிறார். இது முற்றிலும் தவறானது.

இவ்வளவு பெரிய தேர்தலுக்குப் பிறகு, மீண்டும் ஒரு தேர்தலையோ அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சியையோ மக்கள் விரும்புவதில்லை. பொதுமக்களின் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. கோடிக்கணக்கான ரூபாய் பணம், உழைப்பு மற்றும் நேரம் இந்தத் தேர்தலுக்காகச் செலவிடப்பட்டுள்ளது. அப்படியிருக்கும்போது, 108 அல்லது 110 இடங்கள் வைத்துள்ள ஒருவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதை ஏற்க முடியாது. இதுபோன்ற ஒரு நிகழ்வு இதுவரை நடந்தது இல்லை.

ஆட்சி அமைப்பதில் கவர்னரின் இழுபறியையடுத்து தவெக தலைவர் விஜய் உச்சநீதிமன்றத்தை அணுகலாம்.

குதிரை பேரத்தை தடுக்க நீதிமன்றம் தலையிடலாம் என்று அவர் கூறினார்.