தமிழக செய்திகள்

விவசாயிகளுக்கு அள்ளித் தருவார்கள் என பார்த்தால் கிள்ளித் தருகிறீர்கள்..!- தவெக அரசை சாடிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

விவசாயிகள் கடன் தள்ளுபடி, ஊக்கத்தொகை தொடர்பாக சட்டசபையில் தவெக – திமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

தமிழக சட்டசபை கூட்டம் விடுமுறைக்கு பின் இன்று கூடியது. அப்போது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றம் அரசு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்த தீர்மானத்திற்கு திமுக, அதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காரசார விவாதம்

இதைதொடர்ந்து, சட்டமன்றத்தில் நெல், கரும்பிற்கான ஊக்கத்தொகை தொடர்பாக தவெக- திமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

அப்போது பேசிய திமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்," திமுக ஆட்சியின் 5 ஆண்டு காலத்தில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். திமுகவின் 5 ஆண்டு கால ஆட்சியில் விவசாயிகள் போராடவே இல்லை" என்றார்.

இதற்கு, பதிலடி கொடுத்த தவெக அமைச்சர் நிர்மல் குமார்,"5 ஆண்டுகால திமுக ஆட்சியில் விவசாயிகள் மீது குண்டாஸ் போட்டு போராட்டம் ஒடுக்கப்பட்டது" என்றார்.

நாங்களும் பிஸிதான்

எம்ஆர்கே பன்னீர்செல்வம்: எந்த போராட்டம் என தெரியாமல் அமைச்சர் பேசுகிறார், அது சிப்காட் தொடர்பான போராட்டம்.

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பிஸியாகவே இருக்கிறார். எங்கள் ஆட்சிக்காலத்தில் அமைச்சர்கள் டென்ஷனாகத்தான் இருப்போம், நீங்கள் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்.

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்: நாங்களும் தினந்தோறும் டென்ஷனாகத்தான் இருக்கிறாம். வாய்க்கால் தகராறுக்கு கூட சரிசெய்துவிட்டீர்களா என இரவு பகல் பாராதுபோன் செய்கிறார் முதலமைச்சர் விஜய்.

எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்: புதிய ஆட்சி அள்ளி தருவார்கள் என எதிர்பார்த்தனர் விவசாயிகள், ஆனால் கிள்ளி தருகிறீர்கள். அடுத்த ஜென்மத்தில் விவசாயியாக பிறக்க வேண்டும் என முதலமைச்சர் கூறியதால் விவசாயிகள் நம்பிவிட்டனர்.

திமுக இடைகால பட்ஜெட்டில் கரும்புக்கு ரூ.4000 கொடுப்போம் என கூறியிருந்தோம்.

விவசாய ஊக்கத்தொகை

அமைச்சர் வினோத்: திமுக ஆட்சியில் தேர்தல் அறிக்கையில் சொன்னதுபோல் நெல்லுக்கு ரூ.2,500, கரும்பிற்கு ரூ.3500 உயர்த்தி தரவில்லை என்றும், விவசாயிகளுக்கான சிறப்பு ஊக்கத்தொகையை படிப்படியாக திமுக அரசு உயர்த்தியது. திமுக படிப்படியாக உயர்த்திய நிலையில் ஒரே ஆண்டில் இந்தளவுக்கு விவசாய ஊக்கத்தொகை உயர்த்தியது தவெக தான்.

எம்ஆர்கே பன்னீர்செல்வம்: திமுக ஆட்சியில் ரூ.19,500 கோடி கடன் தள்ளுபடி செய்தோம். ரூ.21 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்கிறோம் எனக்கூறிவிட்டு வெறும் ரூ.6000 கோடி மட்டுமே தள்ளுபடி செய்துள்ளீர்கள்.

விவசாயிகள் வாங்கிய ரூ.21,000 கோடி கடனை தவெக அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயக்கடன் முழு தள்ளுபடி என நாங்கள் சொல்லவில்லை, நீங்கள் தான் சொன்னீர்கள். எவ்வளவு கடன் தள்ளுபடி செய்ய முடியும் என்பது தெரிந்துதான் வாக்குறுதி அளிக்க வேண்டும்.

தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி 1.30 கோடி பெண்களுக்கு திமுக அரசு உரிமைத்தொகை கொடுத்தது. தவெக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை பட்ஜெட்டில் நிறைவேற்றவில்லை.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.