தமிழக செய்திகள்

தமிழகமே இனி விஜய்யின் கையில்தான்... எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு

தமிழக முதலமைச்சரை தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே உற்று நோக்கி கொண்டிருக்கிறது. தலைவர் அவர்களை காண கரூர் மாவட்ட மக்கள் மட்டுமல்ல தமிழக மக்களே தவம் கிடக்கிறார்கள்.

கரூர் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெள்ளிவாள் பரிசளித்தார். இதையடுத்து பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர்,

வரலாற்று சிறப்புமிக்க கரூர் மாநகருக்கு சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு கட்சியின் தலைவராக வந்த தளபதி இன்று கரூர் மண்ணிலே தமிழ்நாட்டு முதலமைச்சராக கால் வைத்துள்ளார். அவரை கரூர் மாவட்ட மக்கள் சார்பாகவும், என்னோடு இந்த இயக்கத்திலேயே தங்களை அர்ப்பணித்துக்கொண்ட கழக நிர்வாகிகள் சார்பாகவும் வரவேற்கிறேன்.

தமிழகத்திலேயே ஒரு புரட்சியை ஏற்படுத்திய தலைவர் புரட்சிதலைவர் எம்ஜிஆர். 1972-ல் இயக்கம் ஆரம்பித்த போது அரசியல் நோக்கர்கள் விசில் அடிக்கிறவர்களே வைத்து அரசியல் கட்சியை நடத்த முடியுமா? என்று கேட்டார்கள். அவர்களுக்கு பதில் சொல்லும்விதமாக எம்ஜிஆர் 1977-ல் ஆட்சிக்கு வந்தார்கள். இதன்பின் திரையுலகில் இருந்து வந்தவர்களுக்கு ஆட்சி நடத்த தெரியுமா? என்றார்கள். ஆனால் அதே புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தான் இருக்கின்ற வரை 3 முறை முதலமைச்சராக இருந்து சரித்திர சாதனை படைத்து இந்தியாவே திரும்பி பார்க்க வைத்தவர்.

அதேபோல் தான் இப்போது புரட்சித்தலைரின் அன்பும், புரட்சித்தலைவி அம்மாவின் வீரமும் ஒன்று சேர்ந்த தலைவராக நம்முடைய புரட்சி தளபதி, தமிழக முதலமைச்சரை தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே உற்று நோக்கி கொண்டிருக்கிறது. தலைவர் அவர்களை காண கரூர் மாவட்ட மக்கள் மட்டுமல்ல தமிழக மக்களே தவம் கிடக்கிறார்கள்.

விடியல் தருகிறோம் எனச்சொன்னார்கள், ஆனால் அவர்களுக்கு மட்டுமே விடிந்தது.

தமிழகமே இனி விஜய்யின் கையில்தான் இருக்கிறது. இது உங்கள் காலம். தமிழகத்தில் இனிமேல் நிரந்தரமாக விஜய்தான் ஆட்சியமைப்பார் என்றார்.

SCROLL FOR NEXT