தமிழக செய்திகள்

Easter | ஈஸ்டர் தின நல்வாழ்த்துக்கள் : விஜய் வசந்த் எம்.பி

நல்லிணக்கத்துடன் வாழ்வதே இயேசுவின் போதனைகளின் சாராம்சமாகும்.

காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் ஈஸ்டர் தினத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளை இதயம் கனிந்தும் மகிழ்ச்சியுடனும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மனித குலத்தின் பாவங்களைப் போக்க தம்மை அர்ப்பணித்து சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து அவர்கள் உயிர்த்தெழுந்த தினமே ஈஸ்டர் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. தியாகம், அன்பு, மன்னிப்பு மற்றும் புதுயுகத்தின் நம்பிக்கை ஆகிய உயரிய பண்புகளை மனித குலத்திற்கு உணர்த்தும் இந்த புனித நாள், அனைவருக்கும் புதிய வாழ்வையும் நம்பிக்கையையும் அளிக்கிறது.

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல், இருள் நீங்கி ஒளி வெல்லும் என்பதற்கான நிரந்தர சின்னமாகும். மனிதர்களிடையே அன்பு, சகிப்புத் தன்மை, ஒற்றுமை ஆகியவற்றை வளர்த்தெடுக்க வேண்டிய அவசியத்தை இந்த திருநாள் நமக்கு நினைவூட்டுகிறது.

இன்றைய உலகில் நிலவும் சவால்கள், வேற்றுமைகள் மற்றும் துன்பங்களைக் கடந்து, சமாதானம் மற்றும் சகோதரத்துவம் நிலைபெற வேண்டிய தருணமாகவும் ஈஸ்டர் திருநாள் அமைந்துள்ளது. அனைவரும் ஒருவருக்கொருவர் அன்பும் கருணையும் காட்டி, நல்லிணக்கத்துடன் வாழ்வதே இயேசுவின் போதனைகளின் சாராம்சமாகும்.

இந்த மகத்தான ஈஸ்டர் திருநாளில், மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி, வளம் மற்றும் நலன் பெருகிட இறைவனை பிரார்த்திக்கிறேன்.

அனைவருக்கும் இனிய ஈஸ்டர் நல்வாழ்த்துக்கள்!," என்று குறிப்பிட்டுள்ளார்.